USA India: ”உக்ரைனில் நடப்பது மோடியின் போர், திமிர் பிடித்த இந்தியர்கள்” - அமெரிக்காவின் அடாவடி பேச்சு
USA India Tariff: உக்ரைனில் நடைபெறுவது மோடியின் போர் என, அமெரிக்க அதிபர் மாளிகையின் ஆலோசகர் பீட்டர் நவேரா விமர்சித்துள்ளார்.

USA India Tariff: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை 25% வரை குறைப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
”மோடியின் போர்” என குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையின் ஆலோசகர், பீட்டர் நவேரா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, ”உக்ரைனில் நடைபெறும் மோதல் மோடியின் போர். இந்தியா குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயை வாங்குவது அந்நாட்டின் ஆக்கிரமிப்பை தூண்டிவிடுவதோடு, அமெரிக்க வரி செலுத்துவோர் மீது சுமையை அதிகரித்துள்ளது. எங்களது வலியுறுத்தலை ஏற்று ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியில் 25 சதவிகிதத்தை குறைப்போம்” என நவேரா விளக்கமளித்துள்ளார்.
”அமைதிக்கான பாதை..”
மேலும், “அமைதிக்கான பாதை ஓரளவு இந்தியா வழியாக செல்கிறது. இது மிகவும் எளிதானது. ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, போர் இயந்திரத்திற்கு உணவளிப்பதை நிறுத்தினால், இந்தியா நாளையே 25% வரி தள்ளுபடியை பெறலாம். எனக்கு குழப்பமாக இருக்கிறது. ஏனென்றால் மோடி ஒரு சிறந்த தலைவர். இது முதிர்ச்சியடைந்த மக்களால் நடத்தப்படும் முதிர்ச்சியடைந்த ஜனநாயகம். ஆனாலும் அமெரிக்காவின் வலியுறுத்தலை அவர்கள் ஏற்கவில்லை” என விளக்கமலித்துள்ளார்.
”திமிர் பிடித்த இந்தியர்கள்”
வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்த ரக்தியை நவேரா வெளிப்படுத்தினார், "இந்தியர்கள் இந்த விவகாரத்தில் மிகவும் திமிர்பிடித்தவர்களாக இருப்பது எனக்கு கவலை அளிக்கிறது. அவர்கள், ' எங்களிடம் அதிக வரிகள் இல்லை. இது எங்கள் இறையாண்மை. நாங்கள் விரும்பும் எவரிடமிருந்தும் எண்ணெய் வாங்கலாம்' என்று கூறுகிறார்கள். இந்தியா தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்குவதன் மூலம், தனக்குக் கிடைக்கும் பணத்தை ரஷ்யா அதன் போர் இயந்திரத்திற்கு நிதியளிக்கிறது. உக்ரேனியர்களைக் கொல்கிறது. இந்தியாவின் செயலால் அமெரிக்காவில் உள்ள அனைவரும் பாதிப்பைச் சந்திக்கிறார்கள். மோடியின் மோரால் அமெரிக்கா வணிகம், நுகர்வோர் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய பிரிவுகளில் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்திக்கிறது” என நவேரா குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசுக்கு கோரிக்கை
கடந்த வாரம் பேசுகையில், ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் வாங்கும் கச்சா எண்ணெய் மூலம், இந்திய சுத்திகரிப்பு துறை பெரும் லாபம் பெறுவதாக நவேரா குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், உக்ரைன் மோதலையே மோடியின் போர் என குறிப்பிட்டுள்ளார். இந்தியர்கள் திமிர் பிடித்தவர்கள் என குறிப்பிட்டதோடு, தங்கள் பேச்சை கேட்டு ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்தினால் மட்டுமே வரி குறைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் அறிவித்த 50 சதவிகித வரியானது, நேற்று நள்ளிரவு முதல் இந்திய பொருட்கள் மீது அமலுக்கு வந்துள்ளது. இதனால், உள்நாட்டு ஏற்றுமதியாளர்கள் கடும் பின்னடைவைச் சந்திப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்று வழியை ஏற்படுத்த வேண்டும் என்பதே, மத்திய அரசிடம் வணிகர்கள் தற்போது முன்வைக்கும் கோரிக்கையாக உள்ளது.




















