2 நாட்கள் நடக்கும் ஜவ்வாது மலை கோடை விழா - எப்போது தெரியுமா.?
Jawadhu Hills Summer Festival 2024: கலைஞர் நூற்றாண்டு நிறைவு 24-வது கோடை விழா 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு 24-வது கோடை விழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் நமது மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலையில் கோடை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் வருகின்ற 30.08.2024 மற்றும் 31.08.2024 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற இருக்கின்ற கோடை விழாவை சிறப்பாக மலைவாழ் மக்களுக்கு பயனுள்ள வகையில அரசு திட்டங்கள் குறித்து கடை கோடி மக்களுக்கு சென்று சேரும் வகையில் நடத்துவதற்கு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துறை ரீதியாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:
நமது மாவட்டத்தில் 24-வது ஜவ்வாது மலை கோடை விழா சிறப்பாகவும் மலைவாழ் மக்களுக்கு பயனுள்ள வகையில் நடத்தப்பட வேண்டும். இந்த விழாவிற்கு மக்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தாட்கோ ஆதியோர் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றின் மூலம் பழங்குடியின மக்களை பயன் பெற செய்ய வேண்டும். மேலும், கோடை விழாவில் அரசின் திட்டங்களை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு அரசு துறைகளின் கண்காட்சி அரங்குகள், புகைப்பட கண்காட்சிகள் ஆகியவை காட்சிப்படுத்த வேண்டும்.
இளம் வயதில் திருமண பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு
இந்த விழாவில் இளம் வயதில் திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கள்ளசாரயம் குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். அனைத்து அரசு துறைகளும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து 24-வது கோடைவிழா அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.