அடுத்தடுத்து கூண்டில் சிக்கிய சிறுத்தைகள் - பதற்றத்தில் பாபநாசம் மக்கள்
சிறுத்தைகள், கரடி, மந்தி குரங்கு என தொடர்ந்து ஊருக்குள் புகுவதை நிரந்தரமாக தடுக்கும் வகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது அனவன்குடியிருப்பு மற்றும் வேம்பையாபுரம் பகுதி. இந்த பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாகவும், வீட்டில் கட்டி வைத்துள்ள ஆடு, மாடுகளை கடித்து குதறி மலையடிவாரப்பகுதிக்கு இழுத்து செல்வதாக அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக புகார் தெரிவித்து வந்தனர். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் கன்றுக்குட்டியை கழுத்தில் கடித்தது. அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த உரிமையாளர் சிறுத்தையை கூச்சலிட்டு துரத்தியடித்தனர். அதேபோல சில நாட்களுக்கு முன் இரவில் வீட்டில் கட்டி வைத்திருந்த ஆட்டை கடித்து குதறி இழுத்து சென்றது. அதன் பின்னர் வனத்துறையினர் மோப்ப நாய் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து இரண்டு இடங்களில் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி முதலில் இரு பகுதிகளிலும் தலா ஒரு கூண்டு வைக்கப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை வேம்பையாபுரம் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் ஒரு சிறுத்தை சிக்கியது. அதனை மீட்ட வனத்துறையினர் மணிமுத்தாறுக்கு அருகே மலைப்பகுதியில் உள்ள அப்பர் கோதையார் அடர் வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டனர்.
தொடர்ந்து மீண்டும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். அதே இடத்தில் கூண்டு வைக்கப்பட்டது. மேலும், அனவன் குடியிருப்பு பகுதியில் கூடுதலாக ஒரு கூண்டு என மொத்தம் 3 கூண்டுகள் வைக்கப்பட்டு, வனத்துறையினர் இரவு பகலாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அனவன் குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் பெண் சிறுத்தை ஒன்று சிக்கியது. அதனை தொடர்ந்து இன்று காலையில் வேம்பையாபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் மற்றொரு சிறுத்தையும் சிக்கியுள்ளது. இரவு மற்றும் காலை என தொடர்ந்து அடுத்தடுத்து பிடிபட்ட இரண்டு சிறுத்தைகளையும் அடர் வனப்பகுதியில் கொண்டு சென்று விடும் முயற்சியில் தற்போது வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் பாபநாசம் அருகே மூன்று சிறுத்தைகள் பிடிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் சிறுத்தைகள், கரடி, மந்தி குரங்கு என தொடர்ந்து ஊருக்குள் புகுவதை நிரந்தரமாக தடுக்கும் வகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும் பொழுது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனவிலங்குகள் ஊருக்குள் வருவது என்பது அரிதான ஒன்றாக இருந்தது. தற்போது காட்டிற்குள் போதிய உணவு இறைகள் கிடைக்காமல் அது ஊருக்குள் இறைதேடி வந்து ஆடு போன்றவற்றை வேட்டையாடி செல்கிறது. எனவே வனத்திற்கு போதிய உணவு கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதோடு வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வன விலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.