சேலம் வரும் அன்புமணி... எம்.எல்.ஏ அருளுக்கு வந்த நெஞ்சுவலி.. கூட்டத்தைப் புறக்கணிக்க திட்டமா ?
"சேலம் மேற்கு பாமக சட்டமன்ற உறுப்பினர் நெஞ்சு வலி காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்"

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும், ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி கிட்டதட்ட இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
பாமகவின் தலைவராக இருக்கக்கூடிய அன்புமணி ராமதாஸ் பின்னால், 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோன்று மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களின் ஆதரவும் அன்புமணி ராமதாசுக்கே இருக்கிறது. ஒருபுறம் புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்தாலும், பழைய நிர்வாகிகள் அதே பதிவில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார். இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாமகவில் தொடர்ந்து சலசலப்புகள் அதிகரித்து வருகின்றன.
அன்புமணி சுற்றுப்பயணம்
இந்தநிலையில், அன்புமணி ராமதாஸ் 10 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு வருவாய் மாவட்டம் வாரியாக, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றி வருகிறார். குறிப்பாக பொதுக்குழு கூட்டங்களில், அன்புமணி திமுகவை விமர்சனம் செய்து வருகிறார்.
பாமகவில் நடக்கும் பிரச்சனைக்கு திமுக தான் காரணம் என வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். அன்புமணியின் இந்த பேச்சு பாமகவினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதாக, அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
பாமக எம்எல்ஏக்கு திடீர் நெஞ்சுவலி ?
அந்தவகையில் நாளை சேலம் மாவட்ட பொதுக்குழு நடைபெற உள்ளது. அன்புமணி நாளை சேலம் செல்ல உள்ள நிலையில், டாக்டர் ராமதாஸின் தீவிர ஆதரவாளரான பார்க்கப்படும் சட்டமன்ற உறுப்பினர், அருள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என எதிர்பார்ப்பு இருந்தது.
இந்தநிலையில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சேர்ந்துள்ளார், இது தொடர்பாக புகைப்படங்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் அருள் திட்டமிட்டு நாளை பொது குழுவில் இருந்து கலந்து கொள்ளாமல் தப்பிப்பதற்காக நெஞ்சுவலி என மருத்துவமனையில் சேர்ந்துள்ளாரா ? என அன்புமணி தரப்பினர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மே 30 ஆம் தேதி சென்னை சோழிங்கநல்லூரில் அன்புமணி ராமதாஸ் நடத்திய மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திலும் சேலம் அருள் பங்கேற்காமல் புறக்கணித்திருந்தார். அப்போது தனக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறி, மருத்துவமனையில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியினர் சொல்வது என்ன ?
இதுகுறித்து பாமக வட்டாரங்களில் தொடர்பு கொண்டு விசாரித்த போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் அருளிடம் தொலைபேசி மூலம், பொதுக்குழு கூட்டம் குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அதற்கு எதுவும் பதில் சொல்லாமல் தொலைபேசியை துண்டித்து விட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் தான் அருள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உண்மையாகவே அவருக்கு உடல்நிலை பிரச்சனை என்றால், அவர் குணமாகி வரவேண்டும். ஆனால் பொதுக்குழு நாளை நடைபெற உள்ள நிலையில், ஏன் அவர் சென்னை சென்றார் என்பது குழப்பமாக இருக்கிறது. எங்கள் கட்சியை சேர்ந்த ஒரு சிலரே, சமூக வலைதளங்களில் அவர் மருத்துவமனையில் அனுமதித்தது குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். கட்சியில் நடைபெறும் பிரச்சனை விரைவில் தீரும் என தெரிவித்தனர்.





















