குண்டாறு அணையில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்..! நோய் பரவும் அபாயம்..!
சுகாதாரமற்ற நிலையில் அணையில் செத்து மிதக்ககூடிய மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்திலுள்ள அணைகளும், நீர் இருப்பும்:
தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் 5 அணைகள் உள்ளது. குறிப்பாக கடனாநதி, கருப்பாநதி, ராமநதி, அடவிநயினார், குண்டாறு ஆகியஅ 5 அணைகள் உள்ளது. இந்த அணைகளை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் அணைகளின் நீர் வரத்து குறைந்துள்ளது. 85 அடி கொண்ட கடனா அணையில் 25.0 அடியும், 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதியில் 37.75 அடியும், 72 அடி கொண்ட கருப்பா நதியில் 34.78 அடியும், 132 அடி கொள்ளளவு கொண்ட அடவி நயினார் அணையில் 52.75 அடியும் உள்ளது. அதே போல் மாவட்டத்தின் மிகவும் சிறிய அணையான 36அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணையில் 11.62 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
செத்து மிதக்கும் மீன்கள்:
இந்த நிலையில் இந்தாண்டு நிலவும் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் தண்ணீர் இருப்பானது குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் குண்டாறு அணையில் தண்ணீர் முழுமையாக வற்றிய நிலையில் சகதிகளாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில், தற்போது ஒரு குட்டை போல் அணையில் குறைந்த அளவு தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், அதில் கிடந்த மீன்கள் அனைத்தும் கடுமையான வெயிலின் தாக்கத்தின் காரணமாக செத்து மிதந்து வருகின்றன. குறிப்பாக, குண்டாறு அணையில் தமிழக மீன்வளத்துறை சார்பில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த நிலையில், இதுவரை சுமார் 150 கிலோ மதிப்பிலான மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 10 அடி அளவில் அணையில் சேறும், சகதியுமாக காணப்படும் வருவதால் மீதமுள்ள அந்த மீன்களை பிடிக்க முடியவில்லை என மீன்வளத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் பரவும் அபாயம்:
இந்த நிலையில், தற்போது கடுமையான வெயிலின் தாக்கத்தின் காரணமாக மீன்கள் அனைத்தும் செத்து துர்நாற்றம் வீசி வரும் நிலையில், தற்போது வரை அந்த மீன்களை அப்புறப்படுத்த மீன்வளத்துறை சார்பில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் குண்டாறு அணை பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாய சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே வரும் காலங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ள சூழ்நிலையில் சுகாதாரமற்ற நிலையில் அணையில் செத்து மிதக்ககூடிய மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிய நிலையில் விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போதைய கோடை வறட்சி காரணமாகவும், அணைகளின் நீர்வரத்து குறைந்ததாலும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இந்த நிலையில் செத்து மிதக்கும் மீன்களால் அப்பகுதியை சுற்றிலும் ஏற்பட்டுள்ள துர்நாற்றத்தால் நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். விரைந்து அணையை சீரமைக்க வேண்டும் என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது.