1000 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய தஞ்சாவூர் சமூக ஆர்வலர் - குவியும் பாராட்டு
தஞ்சாவூரில் 1000 நலிந்த குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் பொங்கல் தொகுப்பை சமூக ஆர்வலர் ரகுநாதன் மற்றும் அவரது மனைவி தரணிசெல்வி ஆகியோர் வழங்கினர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் 1000 நலிந்த குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் பொங்கல் தொகுப்பு வழங்கிய சமூக ஆர்வலர் ரகுநாதன் மற்றும் அவரது மனைவி தரணிசெல்வி ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பொங்கல் பண்டிகை:
தஞ்சை அருகே பெரிய புதுப்பட்டினம் ஊராட்சியை சேர்ந்தவர் ரகுநாதன். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார். இவர் தஞ்சை பர்மா காலனியில் உள்ள அங்காள ஈஸ்வரி முனீஸ்வர் கோயில் அறங்காவலர்கள் குழு தலைவர். இந்த அறங்காவலர் குழு தலைவர் பதவி என்பது 35 ஆயிரம் பேர் ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரகுநாதன் சமூக அக்கறையுடன் பல்வேறு நலத்திட்டப்பணிகளை செய்து வருகிறார் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்த்து. பருவநிலை மாறுபாட்டால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தஞ்சையில் மழை பெய்து வந்த நிலையில், பர்மா காலனி மற்றும் பெரிய புதுப்பட்டினத்தைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் பொங்கலை எப்படி கொண்டாடுவது என்ற நிலையில் பொருளாதாரம் இன்றி வறுமையில் வாடினர்.
1000 குடும்பங்கள்:
இப்படி 1000 நபர்களை தேர்ந்தெடுத்து ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ வெல்லம், மற்றும் ஒரு புடவை என ரூ.5 லட்சம் மதிப்பில் உள்ள பொங்கல் பொருட்களை ஏழை மக்களுக்கு ரகுநாதன் மற்றும் அவரது மனைவி தரணிச் செல்வி ஆகியோர் வழங்கினர். இந்த பொங்கல் பொருட்களை ரகுநாதன், தரணிச் செல்வி இருவரும் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக கண்டறிய சி.பி.ஐ. எம்.எல்.மாநகர செயலாளர் எஸ்.எம்.ராஜேந்திரன் உதவி புரிந்தார்.
அவருடன் ஆனந்தன், ரவிச்சந்திரன் சூரிரவிச்சந்திரன், மோகன், வேணுகோபால், விஜயகுமார். பன்னீர்செல்வம் அருணா மோகன் ஆட்டோ சேகர் ஆகியோர் உறுதுணையாக இருந்து உதவிப் பொருட்களை வழங்கினர். பொங்கல் பொருட்கள் பெற்ற பயனாளி ஒருவர் கூறுகையில், பொங்கல் விழா இந்தாண்டு கொண்டாட முடியாத நிலையில் இருந்தோம். நம் பாரம்பரியமிக்க பொங்கல் விழாவை எப்படி கொண்டாட போகிறோம் என்று தவித்து வந்த நிலையில் எங்களுக்கு உதவி கரம் நீட்டிய ரகுநாதன்- தரணி செல்வி குடும்பத்தாருக்கு நாங்கள் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களது பகுதியில் எந்த உதவிகள் என்றாலும் மகிழ்வோடு பல நலத்திட்ட உதவிகளை வழங்கக்கூடிய குடும்பத்தினர் அவர்கள். ஏழ்மை நிலையில் உள்ள மக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று உயர்ந்த நோக்கத்துடன் இந்த பொங்கல் பரிசை தந்துள்ளார் என்று தெரிவித்தார்.
ஏழ்மை நிலை மக்களுக்காக:
இதுகுறித்த ரகுநாதன் கூறியதாவது, கொரோனா காலக்கட்டம் யாராலும் மறக்க முடியாத ஒன்று. அப்போது பல குடும்பத்தினரும் உணவு கூட இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர். இதை பார்த்தபோது மிகவும் வருத்தம் ஏற்பட்டது. இதனால் கொரோனா காலக்கட்டத்தில் முதலில் 2 ஆயிரம் குடும்பத்தினருக்கு 10 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கினேன். இதற்கு எனது மனைவி மற்றும் குடும்பத்தினர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். மேலும் எனது நண்பர்கள் இந்த உதவிகளை வழங்க எனக்கு துணையாக நின்றனர். இந்த உதவிகள் ரெட்டிப்பாளையம், பிள்ளையார்பட்டி, புதுப்பட்டினம், வடக்குவாசல், அண்ணாநகர், கலைஞர் நகர், விளார் என்று 2 ஆயிரம் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட உதவி தொடர்ந்து 4500 குடும்பத்திற்கு வழங்கும் அளவிற்கு உயர்ந்தது.
அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை ஏழ்மை நிலையில் உள்ள மக்களும் உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த உதவிகள் செய்தேன். இதற்கும் எனது மனைவி மற்றும் நண்பர்கள் உறுதுணையாக இருந்தனர். நாம் அனைவரும மகிழ்வுடன் பொங்கல் விழாவை கொண்டாடுவதை போல் அவர்களும் கொண்டாட வேண்டும் என்பதற்காகதான் இவற்றை வழங்கினோம். மனம் நிறைவாக உள்ளது என்று தெரிவித்தார்.