(Source: ECI/ABP News/ABP Majha)
தஞ்சையில் நீதிமன்றத் தீர்ப்பின்படி தற்காலிக கடைகள் அகற்றம்... தெருவோர சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பு
தீபாவளி பண்டிகையை ஒட்டி தற்காலிகமாக வியாபாரம் செய்கின்ற சாதாரண ஏழை எளிய சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாநகரில் தீபாவளி பண்டிக்கைக்காக ஆண்டுதோறும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்பவர்களின் கடைகள் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி அகற்றப்பட்டது. இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற முறையில் மாற்று ஏற்பாடு செய்து தர ஏஐடியூசி கோரிக்கை விடுத்துள்ளது.
ஏஐடியூசி தெருவியாபார தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தெரு வியாபாரிகள் மாநகராட்சியின் அனுமதியோடு உரிய கட்டணம் செலுத்தி தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். கடைகள் ஒதுக்கியதில் விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மேற்கண்ட கடைகளை உடனடியாக அகற்றுவதற்கு உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் மேற்கண்ட கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி தற்காலிகமாக வியாபாரம் செய்கின்ற சாதாரண ஏழை எளிய சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் செலுத்திய பணத்தை உடனடியாக பெற்று தர வேண்டும். இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற விதத்தில் தெரு வியாபாரிகளின் சட்டத்தை அமல்படுத்துகின்ற விதத்திலும் இவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து காவல்துறை பாதுகாப்புடன் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு தெரு வியாபாரிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வியாபாரிகளை ஏஐடியூசி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரகுமார் ஏஐடியூசி மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், தெரு வியாபாரத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துகுமரன் உள்ளிட்டோர் சந்தித்து கலந்துரையாடினர். பின்னர் உயர்நீதி மன்ற தீர்ப்பை முழுமையாக மதித்து செயல்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் தெரு வியாபார செய்வது சட்டப்படி நமது உரிமை என்றும் உரிய பாதுகாப்பு பெற்று வியாபாரம் செய்வோம் என்றும் தெரு வியாபாரிகளிடம் தெளிவுபடுத்தப்பட்டது.