![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கொலம்பஸ்க்கு கொள்ளு தாத்தா ஆகணுமா? அப்போ எங்க கிராமத்திற்கு வாங்க: கிராம மக்கள் அழைப்பு எதற்காக?
இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
![கொலம்பஸ்க்கு கொள்ளு தாத்தா ஆகணுமா? அப்போ எங்க கிராமத்திற்கு வாங்க: கிராம மக்கள் அழைப்பு எதற்காக? Thanjavur news Pudukalvirayanpet near Alakudi road from this area very bad and potholed - TNN கொலம்பஸ்க்கு கொள்ளு தாத்தா ஆகணுமா? அப்போ எங்க கிராமத்திற்கு வாங்க: கிராம மக்கள் அழைப்பு எதற்காக?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/12/6aac677584f28986b4253f44d19a48791723465224199733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர்: கொலம்பஸ்க்கு கொள்ளு தாத்தா ஆகணுமா? அப்போ எங்க ஊருக்கு வாங்க என்று தஞ்சை மாவட்டம் புதுகல்விராயன் பேட்டை கிராம மக்கள் அழைக்கின்றனர். எதற்காக தெரியுங்களா?
தஞ்சை மாவட்டம் ஆலக்குடி அருகே உள்ளது புதுகல்விராயன்பேட்டை. இப்பகுதியிலிருந்து சித்திரக்குடி செல்லும் சாலை மிகவும் சீர்கேடாக பள்ளம், படு குழியாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் வண்ணாரப்பேட்டை, 8. கரம்பை, ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர் உட்பட பல பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான கார், ஆட்டோ, லோடுவேன், லாரி, டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் சித்திரக்குடி, பூதலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பணி முடித்து இருச்சக்கர வாகனத்தில் இரவில் இந்த சாலை வழியாகத்தான் ஊருக்கு திரும்புகின்றனர்.
இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும் இந்த சாலையில் பல இடங்கள் பழுதடைந்து உள்ளது. புது கல்விராயன் பேட்டையிலிருந்து சித்திரக்குடி சாலையில் சுமார் கால் கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைமிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் சாலை பள்ளங்களாக மாறி உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
சாலையின் இருபுறமும் பள்ளங்கள் இருப்பதால் எதிர் எதிரில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே புது கல்விராயன் பேட்டையில் பழுதடைந்துள்ள இந்த சாலையை முழுமைய சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: புதுகல்விராயன் பேட்டையில் மட்டும் இப்படி சாலை பழுதடைந்துள்ளது. இதனால் இரவில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். வலதுபுறம் பள்ளம் இருக்கிறது என்று இடது பக்கம் திரும்பினால் அங்கு ஒரு பள்ளம் வரும் சரி நேராக செல்லலாம் என்றால் அடுத்த நொடியே ஒரு பள்ளம் வந்து விடும். எங்கள் ஊர் சாலையில் செல்ல வேண்டும் என்றால் கொலம்பஸ்க்கு கொள்ளுதாத்தாவாக மாறிதான் செல்ல வேண்டும். அவர் கடலில் வழி கண்டுபிடித்து நாட்டை கண்டுபிடித்தார். எங்கள் கிராமம் வழியாக செல்பவர்கள் சாலையில் வழி கண்டுபிடித்து செல்ல வேண்டும். அந்தளவிற்கு சாலை மாறிவிட்டது. பல்லாங்குழி போல் மாறிவிட்டது.
தற்போது தொடர்ந்து மழை பெய்து வந்தால் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் இரவு நேரத்தில் வருபவர்கள் மிகவும் தடுமாறினர். இதனால் தற்போது அந்த பள்ளங்களில் பெரிய அளவிலான கருங்கற்களை மட்டும் கொட்டியுள்ளனர். இதனால் வாகனங்கள் செல்லும் போது அந்த கருங்கற்கள் சாலையின் நாலாபுறமும் சிதறி கிடக்கிறது. இதனால் வாகனங்கள் பஞ்சர் ஆகி பலரும் தவியாய் தவித்து வருகின்றனர். பேட்ஜ் ஒர்க் மட்டும் பண்ணாமல் முழுமையாக இந்த பழுதடைந்த சாலையை புதிதாக மாற்றித்தர வேண்டும். இங்கிருந்து சித்திரக்குடிக்கு செல்லும் சாலை முழுமையாக புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சாகுபடி பணிகள் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகள் இந்த வழியாக தங்களின் வயல்களுக்கு இடுபொருட்கள், நாற்றுகள் என்று கொண்டு செல்வர். எனவே விரைந்து இநத சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)