அரியவகை ஆஸ்திரேலிய ஆந்தை - வனத்துறையிடம் ஒப்படைத்த சீர்காழி இளைஞர்கள்
வேளாண் தொழிலுக்கு பெரும் நன்மை புரிவதை அறியாமல், மூடநம்பிக்கையாலும் அச்சத்தின் காரணமாகவும் ஆந்தைகள் கொன்று அழிக்கப்படுகின்றன
அபசகுணமாகவும், அச்சத்தின் அடையாளமாகவும், மரணத்தின் குறியீடாகவும் கருதப்படும் ஆந்தைகள் வேளாண் தொழிலின் உற்ற நண்பனாக விளங்குகிறது. உலகெங்கும் 132 ஆந்தை வகைகள் உள்ளன. பெரும்பாலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் புள்ளி ஆந்தை, கூகை அல்லது வெண்ணாந்தை, கொம்பன் ஆந்தை என மூன்று வகை ஆந்தைகள் காணப்படுகிறது. புள்ளி ஆந்தை சாலையோர மரங்கள், மாந்தோப்புகள், பாழடைந்த கட்டடங்களில் வாழும் இயல்புடையது. நகர்ப்புறம் சார்ந்தும் வாழும். தனக்கென வாழ்விட எல்லையை ஏற்படுத்திக் கொள்ளும். வேளாண்மைக்குத் தீங்கு செய்யும் எலி, வெட்டுக்கிளி, புழு பூச்சிகளை உணவாக்கிக் கொண்டு விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகத் திகழ்கிறது.
கூகை அல்லது வெண்ணாந்தைதான் "ஆஸ்திரேலிய ஆந்தை"! கூகைகள் மட்டுமல்ல, பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகள், கிணறுகளில் வாழும். வட்ட வடிவமான வெள்ளை முகம் தட்டுப் போலவும், உடலின் முன்பகுதி வெண்மையாகவும், பின்பகுதி மஞ்சள் நிறத்தில் சிறுசிறு கறுப்புப் புள்ளிகளுடனும் காணப்படும். இரவில் இதனுடைய தோற்றம் அச்சமூட்டக் கூடிய விதத்தில் காணப்படும். ஆந்தைகள் இரவில் நடமாடும் இரவு பறவைகள். இரவு முழுவதும் தங்கள் மென்மையான சிறகுகளால் துளி கூட சப்தமின்றிப் பறந்து திரியும். ஒரு எலி ஓர் இரவில் இரண்டு கிலோ நெல்லை வீணாக்கும் தன்மை கொண்டது.
இதனால் நாட்டின் 20 சதவீத உணவு உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. ஆந்தைகள் எலி, சுண்டெலிகளைப் பிடித்து ஒரே இரவில் 3-4 எலிகளை அப்படியே விழுங்கிவிடும். வேளாண் தொழிலுக்கு பெரும் நன்மை புரிவதை அறியாமல், மூடநம்பிக்கையாலும் அச்சத்தின் காரணமாகவும் ஆந்தைகள் கொன்று அழிக்கப்படுகின்றன. ஆந்தை இனங்களில் உலகிலேயே பெரிதானது கொம்பன் ஆந்தை. பருத்த தோற்றத்துடன் பழுப்பு நிற உடலில் வெளிர் மஞ்சள், ஆழ்ந்த பழுப்புக் கோடுகளையும் கொண்டது. பெரிய வட்ட வடிவ கண்களையும் தலையின் இருபுறமும் நீண்டு நிற்கும் இறகுக் கொம்புன் இன் ஆந்தையின் தெளிவான அடையாளங்கள். இவைகள் பெரிய சண்டை சேவல் அளவில் காணப்படும். எலி, சுண்டெலி, தவளையை உணவாகக் கொள்ளும். சராசரியாக ஒரு நாளைக்கு எட்டு எலிகள் வரை உட்கொண்டு உழவர்களுக்கு நன்மை புரிகிறது.
கூருணர்வு (Sensitive): ஆந்தை போன்ற இரவாடிப் பறவைகளின் பார்வைத் திறன் மிகுந்த கூருணர்வு மிக்கது. மனித கண்களோடு ஒப்பிட்டால் ஆந்தைகளின் கண்கள் 5 மடங்கு பெரியவை. எனவே, இவற்றின் பெரிய கண் பாவை மிகச் சிறிய வெளிச்சத்தையும்கூட உள்வாங்கி உணரும் ஆற்றல் கொண்டது. இதனால் இரவில் நடமாடும் ஆந்தைகளால் எதையும் கூர்ந்து அறிய முடிகிறது. ஆந்தைகளின் கழுத்து மிகவும் துவளக் கூடியது. மனிதர்கள், மற்ற பாலூட்டிகளின் தலைகள் இரண்டு மூட்டுகளால் கழுத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆந்தைகளின் தலையோ ஒரே மூட்டால் இணைக்கப்பட்டுள்ளது. தவிர, இதன் ஒவ்வொரு கழுத்து முள்ளெலும்பும் கணிசமாக இடம்பெயரக் கூடியது. இதனால் தலையை முழுமையாக 360 டிகிரி திருப்பும் திறன் கொண்டுள்ளது.
சுற்றுச்சூழலை சமநிலையுடன் பாதுகாப்பதில் ஆந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலை நாடுகளில் ஆந்தைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. நாமும் அவற்றை அழிவில் இருந்து காக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தின் வாசல் பகுதியில் அரியவகை வெள்ளை நிற ஆஸ்திரேலியன் ஆந்தையை ஒன்று அமர்ந்து இருப்பதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் உடனே சீர்காழி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த வனத்துறையினர் அரிய வகை ஆந்தையை மீட்டு சீர்காழி வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துவந்து இரவு பாதுகாப்பாக பறக்க விட்டனர்.