(Source: ECI | ABP NEWS)
மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்களிடம் ராஜினாமா செய்ய உத்தரவு... முதல்வர் ஸ்டாலினின் அடுத்த மூவ் என்ன?
மதுரை மாநகராட்சியில் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர் ”வாசுகி சசிகுமார்” அவர்களை மேயராக மாற்ற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளிக் கிளம்பியுள்ளது.

மதுரை மேயர் இந்திராணி கணவர் கட்சியில் இருந்து நீக்கியதை தொடர்ந்து மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு வரிவிதிப்பு குறைத்து நிர்ணயம்
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100-வார்டு பகுதிகளில் 3-லட்சத்திற்கு மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான கட்டடங்கள் உள்ளன. இதற்கான வரி வசூல் பணிகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு கட்டடங்களுக்கும் அதன் பகுதிகளுக்கு ஏற்ப வரிவிதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டும். நீதிமன்றத்தின் மூலமாகவோ அல்லது மாநகராட்சி கூட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய தீர்மானத்தின் மூலமாக முடிவெடுக்கப்படும். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக மண்டலம் 2, 3, 4, 5 ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு வரிவிதிப்பு குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் கடந்த ஆண்டு ஆணையாளரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முறைகேடுகள்
சில மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து முறைகேடுகளை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதற்காக விரிவிதிப்புக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டதும் தெரிவித்துள்ளது. 2,3,4 ஆகிய மண்டலங்களில் அதிகளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளது, தெரியவந்துள்ளது. இதையடுத்து ஏற்கனவே முந்தைய ஆணையாளரால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. சைபர் கிரைம் காவல் துறையினர் வரி குறைப்பு தொடர்பான அழிக்கப்பட்ட ஆவணங்கள், குறித்து தீவிர விசாரணையை நடத்தியதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டது.
பெண் மண்டல தலைவர்களிடம் விசாரணை
இது தொடர்பாக கைதான மூவரிடம் நடத்திய விசாரணையின்படி தி.மு.க., மண்டல தலைவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று முன் தினம் பாண்டிச்செல்வி (மண்டலம் 3), சரவணபுவனேஸ்வரி (மண்டலம் 2), சுவிதாவிடம் (மண்டலம் 5) போலீசார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை செய்தனர். அவர்களுடன் கணவர்களும் முறையே பாண்டியன், சரவணன், விமல் ஆஜராகினர். தி.மு.க.,வில் சரவணன் பகுதி, விமல் இளைஞரணி செயலாளர்களாக உள்ளனர். காவல்துறை தரப்பில் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் மண்டலத்த லைவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் பெறப்பட்டு ஆவணம் செய்யப்பட்டது. அதே போல் மண்டலம் 1-ல் முறைகேடு புகார் இல்லாவிட்டாலும் மண்டல தலைவர் வாசுகி மற்றும் அவரது கணவரிடமும் விசாரணை செய்யப்பட்டது. மதுரை மாநகராட்சியில் சுமார் 150 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக தற்காலிக ஊழியர் மற்றும் உயர் அதிகாரிகள் என 8 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராஜினாமா கடிதம்
இந்நிலையில் முதலமைச்சர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். மதுரை மாநகரில் மேயரின் கணவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்யச் சொல்லி முதலமைச்சர் உத்தரவு. கட்சி நிர்வாகிகளுடனான ஒன் – டூ- ஒன் ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியின் போது தேவையான இடங்களில் தயவு தாட்சண்யமின்றி பதவியைப் பறிப்பேன் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் மண்டல தலைவர்களின் பதவி பறிக்கப்படுவது அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளரும், மதுரை மாநகராட்சி மேயரின் கணவருமான பொன்வசந்தை அதிரடியாக கட்சியை விட்டு நீக்கிய நிலையில், இதனைத் தொடர்ந்து மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்யச் சொல்லியுள்ள நிகழ்வு தமிழக அரசியலில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மதுரை மேயர் மாற்றம்?
மதுரை மாநகராட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்ட சூழலில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் மேயர் இந்திராணியை பதவியில் இருந்து தூக்கிவிட்டு, அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர் வாசுகி அவர்களை மேயராக மாற்ற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளிக் கிளம்பியுள்ளது.





















