அம்மன் காசு... புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தனி நாணயம்: தெரியுங்களா?
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் புதுக்கோட்டை ஒரு தனி சமஸ்தானம். தொண்டைமான் மன்னர்கள் ஆட்சியில் தனி சமஸ்தானமாய் விளங்கியதுதான் புதுக்கோட்டை. இந்த சமஸ்தானத்திற்கு என்று தனி நாணயம் வெளியிடப்பட்டது.
தஞ்சாவூர்: இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் புதுக்கோட்டை ஒரு தனி சமஸ்தானம். தொண்டைமான் மன்னர்கள் ஆட்சியில் தனி சமஸ்தானமாய் கம்பீரமாக விளங்கியதுதான் புதுக்கோட்டை. இந்த சமஸ்தானத்திற்கு என்று தனி நாணயம் வெளியிடப்பட்டது என்று தெரியுங்களா?
1738ல் புழக்கத்தில் விடப்பட்ட நாணயம்
இப்போ எப்படி நம் நாட்டின் காசுகளை, பணத்தை "ரூபாய்" என்று அழைக்கிறோமோ அதுபோல் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் நாணயம் "அம்மன் காசு" என்று அழைக்கப்பட்டது. புதுக்கோட்டை சமஸ்தான தொண்டைமான் மன்னர்களால் 1738 இல் புழக்கத்தில் விடப்பட்ட நாணயமே "அம்மன் காசு!' . 1.2 கிராம் எடை கொண்ட இந்த செப்புக்காசு "புதுக்கோட்டை அம்மஞ்சல்லி' என்றும் அழைக்கப்பட்டது! இதன் ஒருபுறம் தொண்டைமான் மன்னர்களால் வணங்கப்பட்ட பிரகதாம்பாள் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். அதன் பின்புறம் தெலுங்கு மொழியில் "விஜயா (வெற்றி என்று பொருள்)" என்றும் பொறிக்கப்பட்டிருக்கும்.
ஒரு பைசாவுக்கு 3 அம்மன் காசுகள் சமம்
இதனை தஙகள் சுயாட்சி உரிமையின் அடையாளமாக சமஸ்தான அரசு புழக்கத்தில் விட்டனர். பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பைசாவுக்கு 3 அம்மன் காசுகள் சமம். இக்காசுகள் தொடக்கத்தில் உள்ளூர் கைவினைஞர்களால் கையால் வெட்டித் தயாரிக்கப்பட்டு பின்னர் இயந்திரம் கொண்டு தயார் செய்யப்பட்டது.
தமிழகத்தின் மிக நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டமும் ஒன்று. இதுவும் ஒரு கடற்கரை மாவட்டம்தான். 42 கி.மீ. நீளமுள்ள கடற்கரை உள்ளது. இதனைச் சுற்றி திருச்சி, சிவகங்கை மற்றும் தஞ்சை மாவட்டங்களும், கிழக்கு பகுதியில் வங்கக் கடலும் சூழ்ந்துள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்திய இந்தியாவில் இருந்த 537 சமஸ்தானங்களில் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானமும் ஒன்று.
இது 1686 இல் தோன்றியது. ராமநாதபுரத்தை ஆண்ட "கிழவன் சேதுபதி' ரகுநாத ராய தொண்டைமானின் தங்கையை மணந்துகொண்டார். பின்னர் இந்நிலப் பகுதியை ரகுநாதராய தொண்டைமானுக்கு தன்னாட்சி உரிமையுடன் ஆட்சி செய்யுமாறு அளித்தார். இவ்வாறாக தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சிக்கு உட்பட்ட பகுதியாக 1686 இல் மாறியது. இந்த சமஸ்தானம் இந்தியா சுதந்திரம் அடைந்தபின் 1948ல் மார்ச் 3ம் தேதிதான் இந்திய நாட்டுடன் இணைந்தது.
பழைய கற்கால கல்லாயுதம்
3050 ச.கி.மீ பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானம் 1686 முதல் 1800 வரை ராமநாதபுரம் சமஸ்தானத்தின் கீழும், அதன்பின் பிரிட்டிஷாரின் கீழும் இயங்கியது. தென்னிந்தியாவின் மிகப் பழமையான கல்வெட்டுகள் சிலவும் இங்கு காணப்படுகின்றன. திருமயம் தாலுக்கா குருவிக்கொண்டான்பட்டியில் (இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய) பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று கிடைத்துள்ளது. புதுக்கோட்டை நகரத்தை சுற்றிலும் இயற்கைக் குகைகளும், அதனுள் பாறை இருக்கை மற்றும் படுக்கைகளும் உள்ளன. இவை மனிதன் தொன்று தொட்டு இங்கு வாழ்ந்ததற்கு ஆதாரமாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செம்பு மற்றும் இரும்பு ஆயுதங்கள், மண்பானைகள், ஓடுகள், மணிகள், அணிகலன்கள், புதைகுழிகள், கல்லறைகள், முதுமக்கள் தாழிகள் என ஏராளமாக பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. இவை புதுக்கோட்டையின் மிக நீண்ட வரலாற்று பெருமையை உணர்த்துகின்றன. இவை அனைத்துமே பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக்காலம் என வரலாற்றின் ஆரம்ப காலங்களிலேயே மனிதன் வாழ்ந்துள்ளதற்கு ஆதாரமாக உள்ளன. கி.மு. 200 முதல் கி.பி. 200 வரையிலான பிராமி எழுத்து கல்வெட்டுகள் சித்தன்னவாசலில் ஏழடிப்பட்டம் குகையின் உள்ளன. மேலும் இக்காலத்திலும் இதன் பின் வந்த காலத்திலும் சமணமதம் இங்கு தழைத்தோங்கி இருந்துள்ளது. பல சமணச் சின்னங்களும். சிற்பங்களும், சிதிலமான சமணப் பள்ளிகளும் நிறையக் காணப்படுகின்றன.
ரகுநாத தொண்டைமான் இங்கு ஒரு புதிய அரண்மனையைக் கட்டினார்
சங்க காலத்திற்குப் பின் பாண்டியர்கள் சோழர்கள், பல்லவர்கள், விஜயநகரப் பேரரசர்கள், மதுரை நாயக்கர்கள் மற்றும் ஹொய்சாளர்கள் என பல்வேறு அரச வம்சத்தினரும், குறுநில மன்னர்களாக முத்தரையர்களும் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரகுநாத தொண்டைமான் இங்கு ஒரு புதிய அரண்மனையைக் கட்டினார். அதனால் புதுக்கோட்டை என்ற பெயர் உருவானது என்று கூறப்படுகிறது.. அரண்மனையை சுற்றி சிறப்பான உட்கட்டமைப்பை கொண்ட புதுக்கோட்டை நகரம் உருவாக்கப்பட்டது.
நடுவே அரண்மனை, சுற்றிலும் நாற்புறமும் தலா 4 அடுக்குகள் வீதம், மொத்தம் 16 வீதிகள், மழைநீர் மற்றும் கழிவு நீருக்கான தனித்தனி வாய்க்கால்கள் என தனித்தன்மையுடன் புதுக்கோட்டை ஊர் உருவாக்கப்பட்டது. இங்கு மழைநீர் சேமிப்பிற்காக 36 குளங்களும் அமைக்கப்பட்டன. 1948ல் இச்சமஸ்தானத்தை ஆட்சி செய்த "ராஜகோபாலத் தொண்டைமான்' இந்திய நாட்டுடன் இதனை இணைத்தார். காலணாவுக்கு பயன்படாது என்று கிராமப்புறங்களில் பேச்சுவழக்கில் கூறப்படும். அந்த காலணாவைவிடவும் அம்மஞ்சல்லி சிறிய காசு என்பதும் குறிப்பிடத்தக்கது.