புதுச்சேரி கல்வி, அலுவலகங்களில் தமிழ் புறக்கணிப்பு? - கண்டுகொள்ளாத முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வியை வழங்க வேண்டும், மேலும் அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாகப் பயன்படுத்த வேண்டும்.

புதுச்சேரி: புதுச்சேரியில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வியை வழங்க வேண்டும், மேலும் அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, புதுச்சேரி தமிழ் உரிமை இயக்கம் சார்பில் துணைநிலை ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி கல்வி, அலுவலகங்களில் தமிழ் புறக்கணிப்பு
புதுச்சேரி தமிழ் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவர் பாவாணன் பொதுச் செயலாளர் மங்கையர் செல்வன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் கைலாசநாதனை சந்தித்து மனு அளித்தனர். புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆட்சி மொழி சட்டம் 1965 படி புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் தாய் மொழியை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும்’, என குறிப்பிட்டிருந்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் உரிமை இயக்க தலைவர் பாவாணன், ‘புதிய கல்விக் கொள்கையின் படி மாநில மொழியில் பாடம் நடத்த வேண்டும் என்று விதிமுறைகள் இருக்க அதனை மீறி தமிழை புறக்கணித்து மற்ற மொழிகளை மாணவர்கள் மத்தியில் திணிப்பதாக குற்றம் சாட்டிய அவர்,கடை மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் முதன்மையானதாக இருத்தல் வேண்டும்’, எனவும் வலியுறுத்தினார்.
ஆளுநரிடம் அளித்த மனுவில்.,
இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 345. மாநிலங்கள் தங்கள் அலுவல் மொழியாக அந்தந்த மாநில மொழியையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வலியுறுத்துகிறது. மேலும், புதுச்சேரி அலுவல் மொழிச் சட்டம் 1965-ன் படி, ஒன்றிய அரசு பகுதிகள் (பிரதேசங்கள்) சட்டம் 1963, பிரிவு 34-ன் விதிகளுக்கு உட்பட்டு, தமிழ் மொழியே புதுச்சேரி ஒன்றிய பகுதியின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
நமது புதுச்சேரி மாநிலத்தில் அலுவல் நிலைகளில் ஆங்கிலம் மட்டுமே கோப்பு மொழியாகவும், அரசு ஆணை வெளியீட்டு மொழியாகவும் கிட்டத்தட்ட நூறு விழுக்காடு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் கூட ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. மேலும், கடை மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகையில் தமிழ் முதன்மையான அடையாளமாக இருத்தல் வேண்டுமெனவும் புதுவை அரசின் ஆணைகளில் உள்ளது. தமிழ் மொழி பேசும் தமிழ் மக்களுக்கான மக்களாட்சியில், மக்கள் மொழியில் நிர்வாகம், ஆட்சி இருப்பதே நியாயமாகும். இதையே புதுச்சேரி ஆட்சி மொழிச் சட்டமும் கூறுகின்றது.
எனவே, புதுச்சேரி அரசு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆட்சிப் பரப்பில் உள்ள அலுவலகங்கள் அனைத்திலும், தமிழே கோப்பு மொழியாகவும். ஆட்சி மொழியாகவும் பயன்படுத்த உடனடியாக நிர்வாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதுபோன்று, மாகே மண்டலத்தில், உள்ள மக்களுக்கு அவர்களின் தாய் மொழியான மலையாள மொழியில் மட்டுமே அலுவலகக் கோப்புகள் மற்றும் அனைத்து நிர்வாக நடைமுறைகளும் நடைபெற வேண்டும்.
ஏனாம் மண்டலத்திலும், தெலுங்கு தாய் மொழிலேயே அனைத்து நிர்வாக நடைமுறைகளும் நடைபெற நிர்வாக உத்தரவு பிறப்பித்து இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















