Tamil Nadu Next DGP : ’தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி இவரா?’ தயாரான பட்டியல்..!
’மத்திய உள்துறையின் புதிய விதியால் தமிழ்நாட்டின் டிஜிபியாக வேண்டும் என்ற கனவில் இருந்த சில ஐபிஎஸ் அதிகாரிகளின் கனவில் மண் விழுந்துள்ளது’

தமிழ்நாட்டின் டிஜிபி சங்கர் ஜிவால் வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியோடு ஓய்வு பெறவிருக்கும் நிலையில், மிக முக்கியமான பதவியான அந்த பொறுப்புக்கு அடுத்து யார் வரப்போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பட்டியலில் முன்னணியில் இருப்பது யார் ?
டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் 8 அதிகாரிகளின் பட்டியலை தமிழக உள்துறை தயார் செய்துள்ளதாகவும் அது இந்த வாரத்தில் மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அந்த பட்டியல் அனுப்பப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, டிஜிபி அந்தஸ்தில் உள்ள சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னியபெருமாள், மகேஷ் குமார் அகர்வால், வெங்கடராமன், வினித் தேவ் வாக்டே ஆகிய 8 பேரின் பட்டியல் மத்டிய அரசுக்கு அனுப்ப தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் மூன்று பேரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த மூவரும் மத்திய அரசு பணியில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் என்பதால் இவர்களில் ஒருவர் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
தமிழ்நாடு அரசு அனுப்பும் 8 பேர் கொண்ட பட்டியலில் தகுதியுள்ள 3 பேரை தேர்வு செய்து மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பும், அவர்களில் ஒருவரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலின் பேரில் டிஜிபியாக நியமிக்கப்படுவார்.
புதிய விதியால் சிக்கல்
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய விதியின்படி, Level 16 ஊதிய விகிதத்தில் இருக்கும் அதிகாரிகள் மட்டுமே டிஜிபி பதவிக்கு பரிசீலிக்கப்படுவார்கள். இதற்கு முந்தைய விதிகளின்படி 30 ஆண்டுகள் பணியை நிறைவு செய்து டிஜிபி அந்தஸ்தில் உள்ள அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளும் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். ஆனால், இந்த புதிய விதியால் சிலரது பெயர் விடுபட்டுள்ளது.
மேலும், டிஜிபி அந்தஸ்தில் உள்ள பிரமோத்குமார், அபய்குமார் சிங், சைலேஷ் குமார் யாதவ் ஆகியோரது பணி காலம் இன்னும் 6 மாதத்திற்குள் நிறைவடையவுள்ள நிலையில், மூவரில் ஒருவரை காவல் படையின் தலைவராக நியமிக்க அரசு முடிவு செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் டெல்லி காவல் ஆணையராக உள்ள தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோராவும் இந்த மாதம் 31ஆம் தேதியோடு ஓய்வு பெறவுள்ளதால் அவரை பரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை.
அதே நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சக விதியின்படி, டிஜிபியாக நியமனம் செய்யப்படவேண்டிய ஐபிஎஸ் அதிகாரி, குறைந்தது 10 வருடம் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதும் சிலருக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
நியமனம் எப்படி நடக்கும் ?
தமிழ்நாடு அரசு அனுப்பும் டிஜிபி அந்தஸ்தில் உள்ளவர்களின் பெயர்களை UPSC என்கிற மத்திய அரசு தேர்வாணயத்தின் குழு தலைவர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு எட்டப்படும். அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர், மாநில தலைமைச் செயலாளர், மாநிலத்தின் தற்போதைய டிஜிபி, மத்திய போலீஸ் படையின் தலைவர்களில் ஒருவர் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிப்பார்கள். அதன்படி, அரசு அனுப்பும் பட்டியலில் இருந்து 3 பேர் இறுதி செய்யப்பட்டு அது மாநில அரசுக்கு அனுப்பப்படும். அதிலிருந்து ஒருவரை தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அரசு நியமித்துக் கொள்ளலாம்.
முக்கியத்துவம் வாய்ந்த நியமனம்
இன்னும் 8 மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிய டிஜிபி நியமனம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு, யாரை புதிய டிஜிபியாக மத்திய அரசு அனுப்பும் பட்டியலில் இருந்து நியமனம் செய்யப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு காவல்துறை வட்டாரத்தில் இப்போதே நிலவத் தொடங்கியிருக்கிறது.






















