தஞ்சையில் மீட்கப்பட்ட 700 ஏக்கர் கோயில் நிலங்கள் விவசாயிகளுக்கு பொது ஏலம்
’’பொது ஏலம் நடத்தியதால் விவசாயிகள் சட்டப்பூர்வமாக குத்தகைதார்கள் என்ற அங்கீகராத்தை பெறுகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு போன்ற அனைத்து பலன்களையும் சட்டப்பூர்வமாக அடைய முடியும்’’
தஞ்சாவூர் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான, காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 700 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு, பொது ஏலத்தில் விடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தையும் புதிதாக அளவீடு செய்து குத்தகைக்கு விடப்படாத நிலங்களை கண்டறிந்து சட்ட விதிகளின் படி பொது ஏலத்தில் விட உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், உதவி கமிஷனர் தலைமையில் கோவில் செயல் அலுவலர், ஓய்வு பெற்ற நில அளவர் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், சிலத்துார் கிராமத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 700 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களை கோவில் நிர்வாகம் புல எண் வாரியாக அளவீடு செய்து நிலங்களின் சாகுபடிதாரர்கள் கண்டறிந்து விவரப்பட்டியில் தயார் செய்து 1500 லாட்களாக பிரித்து, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவின் பெயரில், பரிதியப்பர் கோவில் பாஸ்கரேஸ்வரர் சுவாமி கோவிலில், கடந்த 25, 26 மற்றும் நேற்று ஆகி மூன்று நாட்களில் பொது ஏலம் நடத்தி குத்தகைக்கு விடப்பட்டது. இந்த ஏலத்தில் சிலத்துார், பின்னையூர்,திருநல்லுார் மற்றும் கிருஷ்ணாபுரம் சதுர்காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாகுபடிதாரர்கள் கலந்து கொண்டு நிலங்களை சாகுபடிக்காக பொது ஏலத்தில் குத்தகைக்கு எடுத்தனர். இதில் அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் தலைமையில், உதவி கமிஷனர் சிவராம்குமார் முன்னிலையில், செயல் அலுவலர் ராஜகுரு, ஒரத்தநாடு சரக ஆய்வாளர் புண்ணியமூர்த்தி ஏலம் நடைபெற்றது.
இது குறித்து அறநிலையத்துறையினர் கூறுகையில், இந்து சமய அறநியைலத்துறை கட்டளைகள் சட்டத்தின் படி முறையாக பொது ஏலம் நடத்தியதால் விவசாயிகள் சட்டப்பூர்வமாக குத்தகைதார்கள் என்ற அங்கீகராத்தை பெறுகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு போன்ற அனைத்து பலன்களையும் சட்டப்பூர்வமாக அடைய வழி வகை செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கும் நிலங்கள் மூலம் கிடைக்க வேண்டிய வருவாய் முறையாக வரப்பெற்றுள்ளது. இதனால் தற்போது 25 லட்சம் வருவாய் கிடைக்க பெற்றுள்ளது. இதனால் காலப்பூஜைகள் தடையின்றி நடைபெறும் கோவில் அர்ச்சகர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வழிவகை ஏற்பட்டுள்ளது. இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இது போன்ற நிலங்கள் கேட்பாரற்று உள்ளது. அந்த நிலங்களை விசாரணை செய்து, யாரிடம் உள்ளது என்பதையும், அந்த நிலங்களிலிருந்து முறையாக குத்தகை வழங்கியுள்ளார்களா என்பதை விசாரிக்கப்படும். கோயிலுக்கு சொந்தமான அனைத்து நிலங்களையும் பதியதாக அளவீடு செய்து, குத்தகை விடப்படாத நிலங்களை சட்டவிதிகளின் படி ஏலம் விடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.