CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
CM Stalin On Union Govt: பிளாக்மெயில் செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

CM Stalin On Union Govt: தமிழர்களின் தனிக்குணத்தை பார்க்க வேண்டி இருக்கும் என, மத்திய கல்வி அமைச்சரை முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி:
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “"They have to come to the terms of the Indian Constitution" என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல! "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தி மொழி திணிப்பை நிறுத்துங்கள் என்ற ஹேஷ்டேக்கையும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் சொல்வது என்ன?
காசி தமிழ்ச்சங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தும் வரை நிதி ஒதுக்கீடு இல்லை. புதிய கல்விக்கொள்கையை ஏற்கும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு என்பது விதிமுறை. நாட்டில் உள்ள பிற மாநிலங்கள் எல்லாம் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுள்ளன. பிறகு ஏன் மூன்று மொழிக்கொள்கையை அவர்கள் எதிர்க்கிறார்கள்? அதில் என்ன தவறு இருக்கிறது? தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு மாணவர் தமிழ், கன்னடம், ஆங்கிலம் கற்றுக்கொள்ள முயற்சித்தால் என்ன தவறு? அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் புதிய கல்விக்கொள்கையை ஏற்க மறுக்கிறார்கள்? மாநில மொழிக்காக முக்கியத்துவம் அளிக்கும் புதிய கல்விக்கொள்கையை அரசியலுக்காக தமிழக அரசு ஏற்க மறுக்கிறது” என பேசி இருந்தார். இதனை கண்டித்து தான் முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்:
முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்? மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்? அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம். உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல. எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல. " இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும். " -பேரறிஞர் அண்ணா” என குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

