ஈசிஆரில் பெண்களைத் துரத்திய இளைஞர்கள்; வைரல் வீடியோ- நடந்தது என்ன? கண்டுபிடித்த காவல்துறை!
பெண்கள் பயணித்த கார் மற்றொரு காருடன் மோதியதால் அந்த சொகுசு காரில் இருந்தவர்கள் இந்த காரை துரத்தி நியாயம் கேட்டுள்ளனர்.

ஈசிஆரில் பெண்கள் பயணித்த காரை, இளைஞர்கள் சிலர் அடங்கிய கார் துரத்தியதாக வீடியோ வைரலான விவகாரத்தில், நடந்தது என்ன என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர் வழிமறித்து மிரட்டுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
வழிமறித்து மிரட்டுவது நெஞ்சை பதற வைக்கிறது
இதுகுறித்து அறிகை வெளியிட்ட ஈபிஎஸ், ’’மாநிலத்தின் பிரதான சாலையான ECR-ல், பெண்களை இப்படி கொடூரமாக வழிமறித்து தைரியமாக தாக்க முயலும் அளவிற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை அடியோடு கெடுத்துள்ள இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருந்திய காரில் வந்த சிலர் வழிமறித்து மிரட்டுவது நெஞ்சை பதற வைக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் நடந்த சம்பவம் குறித்து கானத்தூர் காவல்துறை சார்பில் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
’’கடந்த 25.1.25 அன்று நள்ளிரவில் இந்த சம்பவம் தாம்பரம் ஆணையரக கானத்தூர் காவல் நிலைய எல்லையில் நடந்துள்ளது.
காரை துரத்தி நியாயம்
பெண்கள் பயணித்த கார் மற்றொரு காருடன் மோதியதால் அந்த சொகுசு காரில் இருந்தவர்கள் இந்த காரை துரத்தி நியாயம் கேட்டுள்ளனர். ரிவர்ஸ் எடுக்கும்போது கார் மோதி உள்ளது. பின்பு இரு தரப்பினரும் சமாதானம் ஆகியுள்ளனர்.
அடுத்த நாள் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சிஎஸ்ஆர் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில் பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் இது தொடர்பாக விசாரித்து வருகிறார். வழியில் மிரட்டிய இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் அளித்த பெண் மறுப்பு
எனினும் தற்போது இளைஞர்கள் வந்த காரை இடிக்கவில்லை என்று புகார் அளித்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

