எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் எஸ்எஸ்எல்சி தேர்வில் தோற்றுவிட்டோம் என்றும், அரசியல் எனும் சாக்கடை கருணாநிதியையும், எம்ஜிஆரையும் பிரித்துவிட்டது என்றும் மு.க.முத்து ஒருமுறை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று காலமானார். தமிழ்நாட்டை 5 முறை முதலமைச்சராக இருந்தவரும், திமுகவிற்கு 50 ஆண்டுகள் தலைவராக இருந்தவருமான கருணாநிதியின் வாரிசுகளான மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி ஆகியோருக்கு உரிய செல்வாக்குடன் அவர் வாழ்நாளை வாழவில்லை.
மதுவால் அழிந்த மு.க.முத்து:
அவரது மதுப்பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களே அவரது இந்த நிலைக்கு காரணம் என்று பலரும் தெரிவித்துள்ளனர். கருணாநிதியின் மூத்த மகனே இந்த மு.க.முத்துதான் என்பது இன்றைய தலைமுறையினர் பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
இந்த நிலையில், மு.க.முத்து ஒருமுறை தனது தந்தை கருணாநிதி பற்றியும், எம்.ஜி.ஆர். பற்றியும் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
எங்கப்பாவும் நானும் ஃபெயில்:
என்னை எப்படியாவது வாழ்க்கையில் முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்று எங்கப்பா ரொம்ப முயற்சி பண்ணுனாரு. நான்தான் அவர் பேச்சைக் கேட்காம, அவருக்கு மன வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் கொடுத்துட்டேன்.
எனக்கும் எங்கப்பாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அவரும் எஸ்எஸ்எஸ்எல்சி ஃபெயில். நானும் எஸ்எஸ்எல்சி ஃபெயில். ஆனா, அவரு வாழ்க்கையில போராடி ஜெயிச்சு முதலமைச்சர் ஆகிட்டாரு. நான்தான் வாழ்க்கையில தோத்துட்டேன்.
எம்ஜிஆர் மாதிரி ஆக்க ஆசைப்பட்டாரு:
நான் சினிமாவுல நுழைந்ததுக்கு எங்கப்பாதான் காரணம். எனக்கு சினிமாவுல நடிக்க கொஞ்சம் கூட விருப்பம் இல்ல. எங்கப்பாதான் எங்க பெரியப்பா ( எம்ஜிஆர்) மாதிரி என்னை ஆக்கனும்னு ஆசைப்பட்டார். அதுனால என்னை வற்புறுத்தி நடிக்க வச்சாரு. எங்கப்பாவுக்கு என் மேல ரொம்பவே ப்ரியம்.
எங்கப்பா மீது அவருக்கு கோபம் இருந்தாலும் அதைப்பத்தி யோசிக்காம நான் நடிச்ச பிள்ளையோ பிள்ளை படப்பிடிப்புக்கு வந்து, கிளாப் அடித்து தொடங்கி வச்சாரு பெரியப்பா. நான் சினிமாவுல ஜெயிச்சு பெரிய ஆளா வரனும்னு மனசார வாழ்த்தினாரு.
அரசியல் எனும் சாக்கடை:
சிவாஜி சித்தப்பா படங்களை விட எனக்கு எங்க பெரியப்பா(எம்ஜிஆர்) நடிச்ச படம்தான் ரொம்ப பிடிக்கும். பெரியப்பா படங்களை பல தடவ ஸ்கூலை கட் அடிச்சுட்டு தியேட்டருக்கு போய் ரசிச்சு பாத்துருக்கேன். என்னை பாக்குறப்ப எல்லாம் பெரியப்பா எம்ஜிஆர் எங்கப்பா பேச்சைக் கேட்டு நடந்து வாழ்க்கையில முன்னுக்கு வரனும்னு எப்போதும் புத்திமதி சொல்லுவார்.
எங்க பெரியப்பா மட்டும் இந்நேரம் உயிரோடு இருந்திருந்தா என் நிலைமை இந்தளவு மோசம் ஆகிருக்காது. அரசியல்ங்குற சனியன்தான் எங்கப்பாவையும், எங்க பெரியப்பாவையும் பிரச்சுடுச்சு.
இவ்வாறு அவர் மனம் உருகி பேசினார்.





















