
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பாக தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு திமுகவின் ஆர்.எஸ். பாரதிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தன்னை பற்றி அவதூறு பரப்பி பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட அண்ணாமலை: கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்களில் அண்ணாமலையின் சதி இருக்குமோ என்று சந்தேப்படுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அண்ணாமலை சார்பில் வழக்கறிஞர் பால்கனகராஜ், ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உண்மைக்கு புறம்பான, தவறான கருத்துக்களைக் கூறி, மக்கள் மத்தியில் அண்ணாமலையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையிலும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளதாக ஆர்.எஸ். பாரதி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Here’s the copy of the defamation notice sent today to the Organisation Secretary of DMK, Thiru RS Bharathi, for spreading slanderous, false propaganda aimed at me to divert the attention from the misgovernance of the DMK, which led to the death of over 60 people in Kallakurichi.… pic.twitter.com/Ar773oOwxA
— K.Annamalai (@annamalai_k) June 26, 2024
இந்த நோட்டீஸ் பெற்ற மூன்று நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் போதை மறுவாழ்வு மையம் அமைப்பதற்காக இந்த ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் தேதி, கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 63 பேர் உயிரிழந்துவிட்டனர்.
கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரத்தில் திமுக மீது அண்ணாமலை கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதில் சிபிஐ விசாரணைக் கோரி வருகிறார். தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து அண்ணாமலை புகார் மனு அளித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

