Crime: சாலையில் விபத்து, வீட்டில் 3 பெண் பிணங்கள், மருத்துவமனையில் 3 பேர் - குழப்பிய குடும்பம், தவிக்கும் போலீசார்
Kolkata Crime: கொல்கத்தாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பலியான சம்பவம், போலீசாரை கடும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Kolkata Crime: கொல்கத்தாவில் சாலையில் ஏற்பட்ட விபத்தால், மற்றொரு இடத்தில் இறந்து கிடந்த 3 பெண்களின் உடல்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட 3 சடலங்கள்:
கொல்கத்தாவில் ஒரு வீட்டில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம், நகரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தற்கொல என கூறப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சகோதரர்கள் இருவரை மணந்த இரு பெண்களும், அவர்களில் ஒருவரின் மகளும் தான் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களது கணவர்களும், ஒரு சகோதரனின் மகனும் கார் விபத்தில் சிக்கிய நிலையில் தான், பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன.
சாலையில் கார் விபத்து:
பிரணாய் மற்றும் பிரசுன் டே ஆகிய சகோதரர்கள் தங்கள் மனைவிகள் சுதேஷ்னா மற்றும் ரோமி டே ஆகியோருடன் டாங்க்ராவில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். பிரணாய் மற்றும் சுதேஷ்னா தம்பதிக்கு பிரதிக் என்ற மகன் இருந்தான். பிரசுன் மற்றும் ரோமி டே தம்பதிக்கு பிரியம்பதா என்ற மகள் இருந்தார். இந்நிலையில் தான், கொல்கத்தா கிழக்கு பெருநகர பைபாஸில் உள்ள அபிஷிக்தா கிராசிங்கிற்கு அருகே, அதிகாலை 4 மணியளவில் நடந்த கார் விபத்தில் இரண்டு ஆண்களும் சிறுவனும் படுகாயமடைந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் தான் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தல்ல தற்கொலை முயற்சி:
விபத்தில் சிக்கிய மூன்று பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் ஒருவருக்கு சுய நினைவு திரும்பி போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில், “நடந்தது விபத்து அல்ல. நாங்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும், வேண்டுமென்றே காரை மெட்ரோ தூண் மீது மோதினோம். மேலும், எங்கள் வீட்டைச் சேர்ந்த 3 பெண்கள் வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டனர். அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர்” என தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை
வாக்குமூலத்தை தொடர்ந்து, டாங்ராவில் உள்ள வீட்டில் இருந்து 3 பெண் சடலங்களை மீட்ட போலீசார், சம்பவ இடத்தை விசாரித்து, தடயவியல் மற்றும் பிற ஆதாரங்களை சேகரித்தனர். மூன்று உடல்களும் வெவ்வேறு அறைகளில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வீடியோகிராஃபர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கைகள்:
உயிரிழந்த பெண்களின் மணிக்கட்டுகள் அறுக்கப்பட்ட நிலையில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலின் பல இடங்களில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இருவருக்கும் தொண்டையில் வெட்டுக்காயங்கள் இருந்தன. அதிக இரத்தப்போக்குக்குப் பிறகு உயிரிழந்துள்ளனர். 14 வயது சிறுமியின் மார்பு, கால்கள், உதடுகள் மற்றும் தலையில் காயங்கள் இருந்தன. அவளுக்கு விஷம் கொடுக்கப்பட்டு இருப்பது போன்ற தகவல்கள் உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த 3 பெண்களும் உண்மையிலேயே தற்கொலை செய்துகொன்றனரா? அல்லது அவர்களை கொன்றுவிட்டு மற்ற மூன்று பேரும் தற்கொலைக்கு முயன்றனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோல் பதனிடும் தொழிலை நடத்தி வந்த அந்தக் குடும்பம் நிதி நெருக்கடியில் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது கொலை-தற்கொலை வழக்காக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.





















