Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!
சென்னை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த குற்றவாளி சதீஷுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியா. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ். இவர் சத்யபிரியாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், அவரை தொடர்ந்து தொல்லை செய்ததாகவும் கூறப்பட்டது. இப்படிதான் 2022 ஆம் ஆண்டு கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியாவை சதீஷ் தீடீரென ரயில் மீது தள்ளிவிட்டு கொலை செய்தார். சத்ய பிரியாவை காதலிக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியதாலும், அவர் காதலுக்கு சம்பதம் தெரிவிக்கவில்லை என்பதால் அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ரயிலில் தள்ளிவிட்டதாகவும் வாக்கு மூலம் அளித்தார்.
மகள் இறந்ததால் அவரது தந்தை மாணிக்கம் தற்கொலை செய்த கொண்ட நிலையில் தாயர் வரலட்சுமியும் இறந்தார்.
இந்த வழக்கில் சதீஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஸ்ரீதேவி விசாரித்த இந்த வழக்கில் 70 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சதீஷுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க போலீஸ் தரப்பு வழக்குறைஞர் கேட்டுக்கொண்டிருந்தனர்.
விசாரணை அனைத்தும் முடிந்த சூழலில் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி சதீஷ் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இச்சூழலில் தான் இன்று அவருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி கொலையாளி சதீஷூக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை , வன்கொடுமை சட்டத்தின் கீழ் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை, 35 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.