Rohit Sharma: ”நான் கிளம்புறேன்” - டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித் சர்மா? கடைசி போட்டி எங்கு?
Rohit Sharma: இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Rohit Sharma: சிட்னி போட்டியுடன் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது.
சொதப்பிய கேப்டன் ரோகித் சர்மா:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், 2-1 என ஆஸ்திரேலிய முன்னிலை வகித்து வருகிறது. இந்திய அணி வீரர்களின் மோசமான பேட்டிங்கே அணியின், பின்னடைவுக்கு காரணமாக கருதப்படுகிறது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து, ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார். அவரது கேப்டன்சியும் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும்படியாக இல்லை என கூறப்படுகிறது.
5 இன்னிங்ஸ்..31 ரன்கள்..
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா இதுவரை எடுத்த ரன்களின் எண்ணிக்கை, தொடரில் ஜஸ்பிரித் பும்ரா எடுத்த விக்கெட் (30) எண்ணிக்கையை விட ஒன்று அதிகம். அதாவது 5 இன்னிங்ஸ்களில் களமிறங்கி ரோகித் சர்மா 31 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். கடந்த காலங்களில் சிறந்த கேப்டனாக மட்டுமின்றி, அதிரடியான பேட்ஸ்மேன் ஆகவும் டெஸ்டில் திகழ்ந்தார். ஆனால், கடந்த 15 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே விளாசி இருப்பது, ரோகித்தின் மோசமான ஃபார்மை காட்டுகிறது. இது சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான மோசமான விமர்சனங்களை எழச்செய்துள்ளது. இந்நிலையில் தான், ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து முடிவு எடுத்துவிட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.
ரோகித் சர்மாவின் ஓய்வு முடிவு
பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டி வரும் 3ம் தேதி சிட்னியில் தொடர உள்ளது. அந்த போட்டி ரோகித் சர்மாவிற்கு கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. ரோகித்தின் ஓய்வு அறிவிப்பிற்கான சரியான நேரம் தீர்மானிக்கப்படவில்லை என்றாலும், சிட்னியில் நடைபெறும் இறுதி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அது நடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவை மாற்ற ரோகித் சர்மா விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. ஒருவேளை இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் அதில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வு முடிவு தொடர்பாக பிசிசிஐ உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தேர்வாளர்கள் உடன் அவர் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நான்காவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியுடனான கடும் தோல்விக்குப் பிறகு, "கலங்கிவிட்டதாக" ஒப்புக்கொண்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா, அணியின் கூட்டுப் பிரச்சனைகளைத் தவிர்த்து, தனிப்பட்ட முறையில் எனது ஃபார்ம் குறித்து பேச வேண்டிய "விஷயங்கள்" இருப்பதாகக் கூறினார்.