TVK: "2025 நம்ம கையில" சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கப் போகும் விஜய்! தமிழக மனங்களை வெல்லுமா தவெக?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் 2025ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், புத்தாண்டு நாளை பிறக்கிறது. ஆளுங்கட்சியான தி.மு.க.வை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற முழு மூச்சில் அதிமுக பணியாற்றும் என்பது நாம் அனைவரும் அறிந்தது. இந்த பட்டியலில் தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றியே தீர வேண்டும் என்று புதியதாக உருவெடுத்திருப்பவர் நடிகர் விஜய்.
அரசியல் சதுரங்கம் ஆடத்தொடங்கிய விஜய்:
விஜய்யின் அரசியல் வருகையானது ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பி்ப்ரவரியில் கட்சி தொடங்கிய விஜய், அக்டோபரில் நடந்த விக்கிரவாண்டி மாநாட்டில்தான் தன்னுடைய அரசியல் கொள்கைகள், கோட்பாடுகளை அறிவித்தார். தி.மு.க., பா.ஜ.க.வே தனது பிரதான எதிரிகள் என்று அறிவித்த விஜய், தன்னுடைய அரசியல் நகர்வுகளை தற்போது வரை அதற்கேற்றாற்போலவே நகர்த்தி வருகிறார்.
ஆனால், பொதுவெளியில் மக்களைச் சந்திக்காதது, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காதது போன்ற காரணத்தால் பனையூர் பண்ணையார், ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி என்று விமர்சிக்கப்படுகிறார். இந்த சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் அண்ணா மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விஜய் நேற்று முன்னெடுத்த வியூகம் அரசியல் கட்சியினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த விஜய், இந்த விவகாரம் தொடர்பாக தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டது. மகளிர் வாக்குகளை கவரும் வகையில் தன்னை பெண்களின் பாதுகாவலனாக, அண்ணனாக முன்னிறுத்தி இந்த கடிதத்தை அவர் எழுதியிருந்தார்.
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்:
தமிழக அரசியல் களத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஆண்டாக 2025 அமைந்துள்ளது. இந்த ஓராண்டில் நடக்கும் அரசியல் மாற்றங்களும், நிகழ்வுகளுமே சட்டமன்ற தேர்தலில் வலுவாக எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், இந்த 2025ம் ஆண்டை மிக சாதுர்யமாக கையாள விஜய் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், ஒட்டுமொத்த அரசியல் களத்திலும் தன்னை வலுவான அரசியல்வாதியாக காட்டிக்கொள்ள விஜய் 2025ல் பல திட்டங்கைளச் செயல்படுத்த உள்ளார். அதன் முதல்படியாக, ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
சவால் என்ன?
இந்த சுற்றுப்பயணமானது ஜனவரி மாத இறுதியிலோ அல்லது தவெக-வின் 2வது ஆண்டு தொடக்க விழாவிற்கு பிறகோ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தனது கடைசி படத்தில் தீவிரமாக நடித்து வரும் விஜய், அதன் பணிகைளயும் விரைந்தே முடிக்க படக்குழுவிடம் அறிவுறுத்தியுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் மக்களைச் சந்திப்பதால் தனது அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதே விஜய்யின் வியூகம் ஆகும்.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த அரசியல் சுற்றுப்பயணம் என்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது தனக்கும் கைகொடுக்கும் என்று விஜய் நம்பிக்கையுடன் உள்ளார். ஆனால், அந்த சந்திப்பின்போது விஜய் எப்படி மக்களை எதிர்கொள்கிறார்? அவர்களின் கேள்விகளுக்கு என்ன பதில் அளிக்கப்போகிறார்? என்பதே அவர் முன் உள்ள சவால் ஆகும்.
மக்கள் சந்திப்பு மட்டுமின்றி அரசியல் களத்தில் அடிக்கடி இனி விஜய்யை 2025ம் ஆண்டு காணலாம் என்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி தி.மு.க. கூட்டணியை உடைப்பதையே தனது பிரதான முதல் கடமையாக வைத்துள்ள விஜய் அதற்கான பணிகளையும் கையில் எடுத்து காய் நகர்த்தி வருகிறார்.