Flood Relief Fund: மழை பாதிப்பு! நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"தென் மாவட்ட மக்களையும் அரசு காக்கும்”
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டது. அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு நேரில் சென்று, நிவாரண பொருட்களை மக்களுக்கு இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
இதனை அடுத்து, நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், ”கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. காயல்பட்டினத்தில் ஓராண்டு பெய்ய வேண்டிய மழை, ஒரு நாளில் கொட்டித் தீர்த்துள்ளது. 1801ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் அதிக மழை பெய்துள்ளது. தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கால் ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி மிகுந்த பாதிப்படைந்தது. சென்னை மக்களை போல் தென் மாவட்ட மக்களையும் அரசு காக்கும் என உறுதி தருகிறேன்.
வானிலை மையத்தின் எச்சரிக்கை தாமதாக கிடைத்துள்ளது. வானிலை மையம் அறிவித்ததை விட பல மடங்கு அதிக மழை தென்மாவட்டங்களில் பெய்துள்ளது. அதிகனமழை பெய்ததும் மீட்பு பணிக்காக உடனடியாக 10 அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். மாநில பேரிடர் மீட்புப் படையின் 375 வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 275 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 12,600 பேர் மீட்கப்பட்டுள்ளனர்” என்றார்.
"மத்திய அரசிடமிருந்து ஆளுநர் நிதியை பெற்று தருக"
மேலும், "கடும் பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். இன்று வரை 2 பேரிடர்களை கடும் பேரிடராக மத்திய அரசு அறிவிக்கவில்லை. நிதியும் ஒதுக்கவில்லை. மத்திய அரசு விடுவித்த ரூ.450 கோடி தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய தொகைதானே தவிர வெள்ள நிவாரண நிதி அல்ல. அடிக்கடி டெல்லி செல்லும் ஆளுநர், ஒன்றிய அரசிடம் இருந்து தேவையான நிதியை தமிழ்நாட்டிற்கு பெற்று தர வேண்டும்.
கடந்த 19ஆம் தேதி இரவு பிரதமரை சந்தித்து வெள்ள பாதிப்புக்கு தேவைப்படும் நிவாரண நிதியை உடனே வழங்கிட கோரிக்கை வைத்தேன். தென் மாவட்டங்களுக்கு மட்டும் ரூ.2,000 கோடி உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும், கால்நடைகளை இழந்த மக்களுக்கும் தமிழக அரசு நிவாரண வழங்கும்” என்றார்.
நிவாரணம் அறிவிப்பு:
தொடர்ந்து பேசிய அவர், ”தென்மாவட்டங்களில் மழையால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கும் நிவாரணம் ரூ. 4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். நெல்லை, தூத்துக்குடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6,000 நிவாரணமாக வழங்கப்படும். நெல்லை, தூத்துக்குடியில் கடுமையாக பாதிக்கப்பட்ட தாலுகா மக்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும். கன்னியாகுமரி, தென்காசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும்.
நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் சேதடைந்த விளைநிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 நிவாரணம் வழங்கப்படும். வெள்ளத்தால் உயிரிழந்த எருது, பசுக்களின் உரிமையாளர்களுக்கு நிவாரணமாக ரூ.37,500 வழங்கப்படும். முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்கள் ரூ.50,000 வழங்கப்படும். வெள்ளத்தால் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு அதிகபட்ச மானியத் தொகை ரூ.7.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முழுவதும் சேதம் அடைந்த வல்லம் வகை படகுகளுக்கு மானிய தொகை ரூ.1 லட்சம் வழங்கப்படும்" என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.