(Source: ECI/ABP News/ABP Majha)
சகாயம் ஐஏஎஸ் பூரண குணமடைய முளைப்பாரி வளர்த்து பொதுமக்கள் நேர்த்திக் கடன்..
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் உடல்நிலை பூரண குணமடைய, துவரிமான் காலனியில் அமைந்துள்ள சக்தி ஈஸ்வரி அம்மன் கோயிலில் முளைப் பாரி வளர்த்து பொது மக்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்
ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கொரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து பூரண குணமடைய வேண்டி துவரிமான் காலனியில் அமைந்துள்ள சக்தி ஈஸ்வரி அம்மன் கோயிலில் முளைப்பாரி வளர்த்து பொதுமக்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். சகாயம் அரசியல் பேரவை மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நாகஜோதி தலைமையில் மாநில மகளிரணி தலைவி சுஜாதா முன்னிலையில் இந்த வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
சகாயம் கடந்த ஜனவரி மாதம் அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். மேலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் பேரவை என்ற அமைப்பின் மூலம் நேரடி அரசியலில் இறங்கினார். சகாயம் அரசியல் பேரவை சார்பாக 20 தொகுதிகளில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. வேட்பாளருக்கு ஆதாரவாக சகாயம் தீவிர அரசியல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
தீவிர அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட சகாயத்துக்கு, கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, சகாயத்தின் ரத்த அழுத்தும் தொடர்ந்து குறைந்து கொண்டு வருவதாகவும், அவருக்கு தீவிர சகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர், சகாயத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. கடந்த ஏப்ரல் 14 கொரோனா தொற்று சிகிச்சை நிறைவடைந்து சகாயம் வீடு திரும்பினார். சீரற்ற ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவு இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துவரிமான் காலனி பொதுமக்கள் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைய வேண்டி துவரிமான் காலனியில் அமைந்துள்ள சக்தி ஈஸ்வரி அம்மன் கோயிலில் முளைப்பாரி வளர்த்து நேர்த்திக் கடன் வழிபாடு செய்தனர். இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2014-ஆம் ஆண்டு கருங்கல் (கிரானைட்) மற்றும் கனிம மணற்கொள்ளை பற்றி விசாரிக்க இவர் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது . லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்பது இவரது அடிப்படை கொள்கையாக இருந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 14,842 பேருக்கு நோய்த்தொற்று புதிதாக கண்டறியப்பட்டது.