கண்டவுடன் சுடுங்க.. கோயில் முன் வீசப்பட்ட பசுவின் தலை? அஸ்ஸாம் போலீசுக்கு பறந்த ஆர்டர்
பக்ரீத் பண்டிகைக்கு அடுத்த நாள், அஸ்ஸாமில் அனுமன் கோயில் ஒன்றின் முன் பசுவின் தலை கண்டெடுக்கப்பட்டது. இதனால், அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் உள்ள கோயில் முன் இறைச்சி வீசப்பட்டதால் அங்கு கலவரம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. பதற்றமான சூழலுக்கு மத்தியில், கலவரத்தை கட்டுப்படுத்த கண்டவுடன் சுட காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனுமன் கோயில் முன் கண்டெடுக்கப்பட்ட பசுவின் தலை
அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த சூழலில், துப்ரி மாவட்டத்தில் உள்ள கோயில் அருகே இறைச்சி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேண்டும் என்றே கோயில் அருகே இறைச்சி வீசப்பட்டதாகக் கூறி சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், அவை திரும்ப பெறப்பட்டுவிட்டன.
பதற்றமான சூழலுக்கு மத்தியில், கலவரத்தை கட்டுப்படுத்த கண்டவுடன் சுட காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், "சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க துப்ரியில் விரைவு நடவடிக்கைப் படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை நிறுத்தப்பட உள்ளது.
அஸ்ஸாமில் தொடர் பதற்றம்:
இரவில் வெளியே வருபவர்கள் அல்லது கற்களை வீசுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஜூன் 7 ஆம் தேதி, பக்ரீத் பண்டிகைக்கு அடுத்த நாள், அனுமன் கோயில் ஒன்றின் முன் பசுவின் தலை கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரையும் உள்ளடக்கிய அமைதிக் குழுக்கள் நல்லிணக்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தன. மறுநாள், மீண்டும் ஒரு பசுவின் தலை கோவிலின் முன் வைக்கப்பட்டு இரவில் கற்கள் வீசப்பட்டன.
போலீசுக்கு பறந்த ஆர்டர்:
வங்கதேச நாட்டின் ஆதரவு பெற்ற நோபின் பங்களா என்ற அமைப்பு, துப்ரியை வங்கதேசத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை ஒட்டியிருந்தது. இந்த சுவரொட்டிகள், வங்கதேச ஆதரவுடன் கூடிய ஒரு வகுப்புவாத சக்தி துப்ரியில் செயல்பட்டு வருவதையும், அவர்கள் மாவட்டத்தை சீர்குலைக்க வேலை செய்வதையும் சுட்டிக்காட்டுகிறது.
துப்ரியில் ஒரு புதிய மாட்டிறைச்சி மாஃபியா உருவாகியுள்ளது. இது, பக்ரீத்துக்கு முன்பு ஆயிரக்கணக்கான மாடுகளை வாங்கியது. இது எனக்குத் தெரிய வந்தது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த கால்நடை வர்த்தகத்தை தொடங்கியவர்களை கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.





















