Online Rummy Ban: ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம்.. ஒப்புதல் அளித்த தமிழ்நாடு அமைச்சரவை..!
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட அவசரச் சட்டத்திற்கு ஆளுநடின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
View this post on Instagram
கடந்த ஜூன் 27ம் தேதி முதலமைச்சரிடம் அளிக்கப்பட்ட அறிக்கை அன்றைய தினமே அமைச்சரவை பார்வைக்காக வைக்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுக்கள் ஏற்படுத்தியுள்ல தாக்கம் பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இணையவழி விளையாட்டுக்களின் தாக்கம் குறித்து பொதுமக்களிடம் மின்னஞ்சல் மூலம் கருத்துகளும் பெறப்பட்டன. அனைத்து கருத்துகளின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டம் தயாரிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 29 ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட வரைவு மேலும் மெருகூட்டப்பட்டு இன்று அமைச்சரவையில் ஒப்புதல் தரப்பட்டது.
ஆன்லைன் சூதாட்டம் தடை:
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் சந்திரு தலைமையிலான குழு கடந்த ஜூலை மாதம் 28 ம் தேதி தனது பரிந்துரைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தார். தொடர்ந்து அந்த அறிக்கையில் உள்ள விஷயங்கள் குறித்தும், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது பற்றியும் அன்றைய தினமே அமைச்சரவை கூட்டத்தில் துறை வாரியாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
71 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் அதனை விளையாடுபவர்களின் திறன்கள் எந்த விதத்திலும் அதிகரிப்பதில்லை என்றும் மாறாக அவர்களுடைய திறன்களை குறைக்கும் வேலைகளையே ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகள் செய்கின்றன. விளையாடும் நபர்களை ஆன்லைன் விளையாட்டுகள் அடிமையாக்குன்றன என்றும் அதோடு அவர்களை கடனாளியாக்கும் திட்டத்துடனே அவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணம் இழப்பு அபாயம் இருப்பதாக கூறி தடை போடப்பட்ட நிலையில், அவை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன. ஆனால், இந்த முறை இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளால் பொதுமக்களின் உடல் நலம் மற்றும் மன நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மக்களின் நல்வாழ்விற்காக இந்த ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் உரிமையும் அதிகாரமும் மாநில அரசுக்கு இருப்பதாகவும், அதன் அடிப்படையில் தடை செய்தால், நீதிமன்றம் தலையிட முடியாது.
அதேபோல், ஆன்லைன் விளையாட்டுகளால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 17 மரணங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள நீதியரசர் சந்துரு, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை மேற்கொள்ளும் நிறுவனங்களின் பிரதான நோக்கம் லாபமாக இருக்கிறதே தவிர, விளையாடுபவர்களின் திறன்களை மேம்படுத்துவதாக இல்லை. அதனால், இதுபோன்ற விளையாட்டுகள், விளையாட்டுகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு கூட தகுதியற்றவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுகள் என்பது உடலினை உறுதி செய்வதாகவும், மனதினை தெளிவுப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்ற நிலையில், ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள், மொபைல், கம்யூட்டர் போன்ற இயந்திரங்கள் மூலம் விளையாடும் நடைமுறையாக இருக்கிறது. இது விளையாடிய பின், அவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எந்தவிதமான புத்துணர்ச்சியையும் தராமல், மாறாக மன அழுத்தத்தை தருகிறது என நீதியரசர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.