தூக்கு தண்டனை கொடுத்திருக்கணும்.. அபிராமியை பார்த்து நீதிபதி சொன்னது என்ன?
"குன்றத்தூர் பிரியாணி அபிராமி வழக்கில் உணவு இடைவெளிக்கு கூட செல்லாமல், நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது"

சென்னை குன்றத்தூர் பகுதியில், கள்ளக்காதலனுக்காக தான் பெற்ற இரண்டு குழந்தைகளை கடந்த 2018 ஆம் ஆண்டு கொலை செய்த, குன்றத்தூர் பிரியாணி அபிராமி வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம் செய்த கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரம் மற்றும் அபிராமி ஆகிய இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து காஞ்சிபுரம் முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். வழக்கமாக நீதிபதிகள் தீர்ப்பு கொடுக்கும்போது, அவர்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால் இந்த வழக்கில் வழக்கத்தை மீறி, தனது உணர்ச்சிகளை தீர்ப்பின் போது நீதிபதி செம்மல் வெளி.காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி சொன்னது என்ன ?
தனது குழந்தைகளை கொலை செய்த வழக்கில், முதல் குற்றவாளி அபிராமி மற்றும் இரண்டாவது குற்றவாளி மீனாட்சி சுந்தரம் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, உணவு இடைவேளைக்கு பின் தண்டனை குறித்து விவரங்களை வாசிப்பதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அடுத்த 10-வது நிமிடமே நீதிபதி செம்மல் நீதிமன்றத்திற்கு திரும்பினார். இப்படி ஒரு குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்காமல் எப்படி என்னால் சாப்பிட முடியும் என கூறிவிட்டு தீர்ப்பு வாசிக்க தொடங்கினார்.
தண்டனை விவரங்களை வாசித்த பின்னரே சாப்பிட செல்ல இருப்பதாகவும் கூறினார். இந்த வழக்கில் அபிராமிக்கும் மீனாட்சி சுந்தரத்திற்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். நாம் வாழ்வது காந்தி தேசம், பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் என்று தண்டனை வழங்க முடியாத சூழல் என்னை தடுக்கிறது.
ஒரு தாய் தன் பெற்ற இரு குழந்தைகளை தன்னுடைய காம இச்சைக்காக கொலை செய்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. நம் நாட்டில் பிள்ளை பாக்கியம் இல்லாமல் எத்தனை பெண்கள் தவம் இருக்கிறார்கள்? அப்படி இருக்க இதை மன்னிக்க இயலாத குற்றம். முதல் குற்றவாளியான அபிராமிக்கும் அவருக்கும் இணையாக செயல்பட்ட சுந்தரத்திற்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து உத்தரவிடுகிறேன் என தீர்ப்பளித்தார்.
கோரிக்கையை நிராகரித்த நீதிபதி
நான் ஏற்கனவே ஏழு வருடமாக சிறையில் இருக்கிறோம் எனவே எங்களுடைய தண்டனையை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். இந்தப் பொறுப்புணர்வு காம இச்சைக்காக இரு குழந்தைகளை கொலை செய்வதற்கு முன் இருந்திருக்க வேண்டும், உங்களுக்கு இரக்கம் காட்ட இயலாது என நீதிபதி சம்மல் தெரிவித்தார்.





















