Senthil Balaji: பரபரப்பு! செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு! ICU பிரிவில் அனுமதி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.அரசில் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் செந்தில் பாலாஜி, கடந்தாண்டு அவர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் செந்தில் பாலாஜி:
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் , அவர் ICU பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி உடல்நலககுறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
கடந்தாண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்த அமலாக்கத்துறையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து ஜாமின் மறுப்பு:
பின்னர், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நலக்குறைவை காரணம் காட்டி செந்தில் பாலாஜி பலமுறை ஜாமின் கோரியிருந்தார். ஆனாலும், அவருக்கு நீதிமன்றம் இதுவரை 45 முறைக்கு மேலே மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிறையிலே இருந்து வந்த செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். மேலும், செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை காரணம் காட்டியும் அவருக்கு பிணை மறுக்கப்பட்டது.
குவிந்த தொண்டர்கள்:
எதிர்க்கட்சிகள் விமர்சனம், நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட காரணங்களைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது, எம்.எல்.ஏ.வாக மட்டும் பதவி வகித்து வரும் செந்தில் பாலாஜி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக்காக மட்டும் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், தற்போது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது தொண்டர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். இதனால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 3 மாத நிலுவை; கவுரவ விரிவுரையாளர் ஊதியம் எப்போது? ஊதியத்தை ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தவும் கோரிக்கை
மேலும் படிக்க: Pa. Ranjith: ”தி.மு.க., அ.தி.மு.க. எங்களுக்கு என்ன செய்தது? திருமாவளவனை திருப்பி விடுகிறார்கள்” - பா. ரஞ்சித் ஆவேசம்