காஞ்சிபுரம்: பட்டு கூட்டுறவு சங்கத்தில் 5 பேர் தகுதிநீக்கம்.. குளறுபடிகளால் நடவடிக்கை..
பட்டு புடவைக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் ஊழல் காரணமாக கைத்தறி கூட்டுறவு சங்கம் நிர்வாகக் குழு கலைக்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டு புடவைக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் ஊழல் காரணமாக கைத்தறி கூட்டுறவு சங்கம் நிர்வாகக் குழு கலைக்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் நடந்து என்ன ? இதோ ஓர் பார்வை. காஞ்சிபுரம் காந்தி சாலையில் இயங்கி வருகிறது காஞ்சிபுரம் 'ஸ்ரீ முருகன் பட்டு கூட்டுறவு சங்கம்'. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 22 கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் மிகவும் பழைமையான சங்கமாக முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது 1957-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்தச் சங்கத்தில் 3600 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்தச் சங்கத்துக்கு 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில், அதிமுகவை சேர்ந்த 7 பேர் தலைவர், துணைத் தலைவர், இயக்குனர் ஆகிய பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் மீண்டும் 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்டனர். இச்சங்கத்தில் வீ. வள்ளி நாயகம் தலைவராகவும் (அதிமுக) , திருமதி ஜெயந்தி சோமசுந்தரம் துணை தலைவராகவும், (அதிமுக) நிர்வாக குழு உறுப்பினராக அதிமுக , திமுகவினர் என பலர் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு சங்க தணிக்கை நடைபெற்றது. இதில் பல குளறுபடிகள் உள்ளதை கண்ட தணிக்கை அதிகாரிகள் இது குறித்த தனி அறிக்கையை கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனருக்கு அளித்தனர்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை காஞ்சிபுரம் சரக கட்டுப்பாட்டில் ஜி 1653 காஞ்சிபுரம் முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், கடந்த 2016-17 ஆம் ஆண்டு வரையில் லாபத்தில் இயங்கி வந்துள்ளது.
2017-18 ஆம் ஆண்டில் கூட்டுறவு சங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டு நிர்வாகம் செய்யத் தவறியதால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை அறிக்கையும் அதனைத் தொடர்ந்து கூடுதல் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுவிட்டு முறைகேடு தொடர்பான தகவல்களையும் பட்டியலிட்டுள்ளனர்.
அதில், 1.4.2017 முதல் 26.6.2018 வரையில் வாகன வாடகைக்கு வழங்கியதாக முறையான ஆவணங்கள் இல்லாமல் செலவுச் சீட்டு இல்லாமல் ரூ.4,54,338 செலவிடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் முறையான கொள்முதல் பற்றுச்சீட்டு இல்லாமல் உபசரிப்பு மற்றும் விளம்பரத்துக்காக ரூ.3,55,246 செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பணத்தில் 3,34,644 ரூபாய்க்கு போலியான பில்கள் மற்றும் வவுச்சர்கள் மூலம் நிதி முறைகேடு நடந்துள்ளது. இதில், நிர்வாக அனுமதியின்றி வாடகை முன்பணம் மற்றும் உள் அலங்காரப் பணிகளுக்கு ரூ.33,03,214 வழங்கப்பட்டுள்ளது.
செலவுச் சீட்டு இல்லாமல் நாளேட்டில் மட்டும் எழுதப்பட்ட கணக்குகள், எதற்காக கார் பயன்படுத்தப்பட்டது என்ற விவரம் இல்லாமல் செலவிடப்பட்ட 4,41,938 ரூபாய், எதற்காக செலவிடப்பட்டது என்ற விவரமே இல்லாத 24,28,662 ரூபாய்,முறையற்ற விளம்பர செலவுகளுக்கான 57,37,000 ரூபாய் என முறைகேட்டுக்கான கணக்கு வழக்குகள் நீளுகின்றன. சங்கத்துக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அன்பளிப்பு பொருள் அளித்தல், பூ அலங்காரம், இதர செலவினங்களுக்கான பிரசாதப் பைகள் தயாரித்ததாகக் கூறி ரூபாய் 18,87,345 செலவிடப்பட்டது. இதற்காக எந்த பில்களும் இல்லாமல் 47 பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை விடுவித்த நிர்வாக இயக்குநர் மோகன்குமாரிடம் இருந்து தண்ட நடவடிக்கை மூலம் வசூல் செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த இழப்புத் தொகை ரூ.5 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 81 விசாரணை அறிக்கையின் கூடுதல் அறிக்கையின் அடிப்படையில், காஞ்சிபுரம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குனர் அவர்கள் செயல்முறை ஆணைபடி 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டப்பிரிவு 36(1) கீழ் சங்க தலைவரான வீ.வள்ளிநாயகம் மற்றும் திருமதி ஜெயந்திசோமசுந்தரம் துணைத் தலைவர் , நிர்வாக குழு உறுப்பினர்களான எஸ்.கீதா , கிருஷ்ணமூர்த்தி மற்றும் இளங்கோவன் ஆகியோரை நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் தற்போது காஞ்சிபுரம் நெசவாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.