Coolie Movie Review : ரஜினி ரசிகர்கள் இத எதிர்பார்க்கல... கூலி திரைப்பட விமர்சனம்
Coolie Movie Review in Tamil: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்
Lokesh Kanagaraj
Rajinikanth , Nagarjuna , Upendra , Satyaraj , Shruti Haasan , Aamir Khan ,
கூலி படத்தின் கதை
லோகேஷ் கனகராஜின் மற்ற படங்களைப் போல் ஒரு மிகப்பெரிய கடத்தல் கும்பலை மையப்படுத்தியே கூலி படத்தின் கதையும் அமைந்துள்ளது. முந்தைய படங்களில் போதைப் பொருட்கள் என்றால் இந்த படத்தில் தங்க வாட்ச். இந்த கடத்தல் கும்பலின் தலைவனாக வருகிறார் சைமன் ( நாகர்ஜூனா). அவரது விஸ்வாசியாக தயால் ( செளபின் சாஹிர்). இன்னொரு பக்கம் மேன்ஷன் வைத்து நடத்தி வருகிறார் நாயகன் தேவா ( ரஜினி). தனது நெருங்கிய நண்பன் ராஜசேகர் ( சத்யராஜ்) இறந்தது கேள்விப்பட்டு அவரது உடலை பார்க்க செல்கிறார் தேவா. சத்யராஜின் மூன்றில் ஒரு மகளாக வருகிறார் ப்ரீத்தி (ஸ்ருதி ஹாசன் ) தனது நண்பன் இயற்கையாக சாகவில்லை அவர் கொல்லப்பட்டதை தெரிந்துகொள்ளும் தேவா இந்த கடத்தல் கும்பலை தேடுகிறார்.
ராஜசேகர் ஏன் கொல்லப்பட்டார்.? தேவாவுக்கும் சைமனுக்குமான முன்னாள் பகை என அடுத்தடுத்த கேள்விகளோடு நகரும் கதை படத்தின் இறுதி வரை புதிய தகவல் ஒன்றை சேர்த்துக் கொண்டே வருகிறது. முழுக்க முழுக்க வன்முறை நிறைந்த ஒரு ஆக்ஷன் திரைப்படமே கூலி. லோகேஷ் கனகராஜின் டெம்பிளேட் டச் இருந்தாலும் சிக்கலான கதை சொல்லலும் சலிக்க சலிக்க ஆக்ஷன் காட்சிகளும் படத்தின் பெரிய பின்னடைவாக அமைகின்றன.
கூலி திரைப்பட விமர்சனம்
லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கிய விக்ரம் படத்தில் கதைசொல்லும் விதத்திலும் மாஸ் காட்சிகளிலும் ஒரு பேலன்ஸ் இருந்தது என்று சொல்லலாம். முதல் பாதியில் கமலையே காட்டாமல் கதையில் கவனம் செலுத்த அவருக்கு அவகாசம் கிடைத்தது. ஆனால் ரஜினி படங்கள் என்றாலே ரசிகர்கள் பெரும்பாலும் எதிர்பார்ப்பு மாஸ் காட்சிகளை தான். இந்த மாஸ் காட்சிகளில் உருவாக்குவதில் வெற்றிபெற்ற லோகேஷ் சுவாரஸ்யமாக சொல்ல கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். விக்ரம் படத்தில் வர்க் அவுட் ஆன பல அம்சங்கள் கூலி படத்தில் எந்த வித கவனமும் பெறாமல் கடந்து செல்லப்படுகின்றன.

வன்முறை காட்சிகளை உருவாக்குவது , சண்டைக் காட்சிகளின் பின்னணியில் துள்ளலான பாடல்களை ஓடவிடுவது , ஒவ்வொரு கேரக்டருக்கும் சூப்பரான என்ட்ரி கொடுப்பது என தனக்கு இயல்பாக வரும் விஷயங்களை சிறப்பாக செய்திருந்தாலும். வழக்கமான இந்த கேங்ஸ்டர் டிராமாவை சுவாரஸ்யபடுத்த ஒரு குட்டி சைன்ஸ் ப்ராஜெக்ட்டை கதையில் கொண்டு வருகிறார். அதே நேரம் எமோஷனைக் கூட்ட ஒரு சின்ன ட்விஸ்ட். இந்த சின்ன சின்ன ட்விஸ்ட்கள் வெறும் கதை நகர்த்த்தும் யுக்திகளாக மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இறுதிகாட்சி வரை படத்தை முடிக்க முடியாத அளவிற்கு வெவ்வேறு கதைகள் துண்டு துண்டாக இணைக்கப்பட்டிருக்கின்றன.
கேரக்டராக செளபின் நடித்துள்ள தயால் ஒரு அக்மார்க் லோக்கி டச். விக்ரம் படத்தின் ஏஜண்ட் ரிடா ஃபார்முலாவில் இந்த படத்திலும் ஒரு ட்விஸ்ட் உள்ளது. நாகர்ஜூனாவின் தோற்றம் பெரியளவில் ஹைப் கொடுத்தாலும் தனித்துமாக சொல்லும்படி அவரது கதாபாத்திரம் எழுதப்படவில்லை. அதேபோல் சத்யராஜ் , உபேந்திரா , ஆமிர் கான் எல்லாம் மாஸ் தருணங்களுக்காக மட்டுமே கதைக்குள் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ஸ்ருதி ஹாசனுக்கு நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய சில காட்சிகள் உள்ளன.

ரஜினியின் நடிப்பில் நாம் பார்த்து ரசித்து வந்த பல தருணங்களை ரிகிரியேட் செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஏ.ஐ மூலம் சொல்லப்படும் ரஜினியின் பிளாஷ்பேக் ஆடியன்ஸூக்கு பைசா வசூல் மொமண்ட். காட்சிக்கு காட்சி அனிருத் புதிய டிராக்கை கொடுத்து படத்தின் பல்ஸை பிடித்து வைக்கிறார். கூலி லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் ஒரு மாஸ் ரஜினி படம். சிந்திக்க கூடிய மாஸ் ரஜினி படத்தை பார்க்க முடியாதது ரசிகர்களின் தவறா அல்லது இயக்குநரின் தவறா என்று சொல்வது கடினம்.





















