(Source: ECI/ABP News/ABP Majha)
குடிநீர் தொட்டியில் செத்து கிடந்த நாய்; காவல்துறையினர் விசாரணை - சேலத்தில் பரபரப்பு.
நாயை மர்ம நபர்கள் கொன்று தொட்டியில் வீசி இருக்கலாம்? என தாரமங்கலம் காவல்துறையினர் தீவிர விசாரணை.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டையான் வட்டம் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் இருந்து அருகில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், ஆட்டையான் வட்டம், கொடியன் வட்டம், புதுக்குடியான் வளவு, சேவை வட்டம், கோலியான் காடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் தண்ணீர் திறந்து விட வந்த டேங்க் ஆப்ரேட்டர் அம்மாசி குடிநீர் தொட்டி இருக்கும் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது தொட்டியின் மீது ஏறி எவ்வளவு தண்ணீர் உள்ளது என்று எட்டிப் பார்த்த போது தண்ணீர் தொட்டிக்குள் நாய் ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதை அடுத்து இந்த தகவலை ஊராட்சி நிர்வாகத்துக்கும் தாரமங்கலம் போலீசருக்கும் தெரிவித்துள்ளார். இதனிடையே குடிநீர் தொட்டியில் நாய் செத்து கிடந்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தண்ணீர் தொட்டி அருகே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தொட்டிகள் கிடந்த நாயை ஊராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தி தொட்டியில் இருந்த நீரை முழுவதும் வெளியேற்றிபட்டு, சுத்தம் செய்து மீண்டும் குடிநீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே நாயை மர்ம நபர்கள் கொன்று தொட்டியில் வீசி இருக்கலாம்? என கூறப்படுகிறது. இது தொடர்பாக தாரமங்கலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இன்று மாலைக்குள் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.