சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தீவிபத்து எதிரொலி : சேலம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.
மாவட்ட ஆட்சியர் வருகையை அறிந்த சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பழுதடைந்த நிலையில் இருந்த தீயணைப்பு உபகரணங்களை ஒரு சில இடங்களில் மட்டும் தீயணைப்புத் துறையினர் மாற்றி வைத்தனர்.
![சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தீவிபத்து எதிரொலி : சேலம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு. Impact of fire at Rajiv Gandhi Government Hospital, Chennai - District Collector's sudden inspection at Salem Government Hospital. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தீவிபத்து எதிரொலி : சேலம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/29/c8fd3e4b82b5882514ee8e2a3f8c29d5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனையில் உள்ள தீ தடுப்பு கருவிகள் செயல்படுகிறதா? என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார். கடந்த 27 ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டு நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் வேறு எங்கும் நடக்காமல் இருக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு இன்று காலை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் திடீரென ஆய்வு செய்தார். மருத்துவமனையில் உள்ள தீ தடுப்பு கருவிகள் இயங்குகிறதா? பழுதாகி உள்ளதா? என நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பின்னர் மருத்துவமனையில் உள்ள குடிநீர் தொட்டி மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீர் வெளியேற்றும் மின் மோட்டார்களையும் அவர் பார்வையிட்டார். மின் மோட்டார்கள் பழுதாகி உள்ளதா? மீண்டும் பராமரிக்க வேண்டுமா? என்றும் விசாரித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சென்னையில் தீ விபத்து ஏற்பட்டது போல வேறு அரசு மருத்துவமனைகளில் தீவிபத்து ஏற்பட்டு விடாமல் இருக்க கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனையடுத்து மருத்துவமனை முழுவதும் ஆய்வு செய்தோம். மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதா? அப்படி தீவிபத்து ஏற்பட்டால் அதை தடுக்க உரிய கருவிகள் உள்ளதா? என நேரில் பார்வையிட்டோம். சிறுசிறு பழுதுகள் உள்ளது. இவைகள் 48 மணி நேரத்தில் சரி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார். இதற்கான பணிகளை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவர் குழு, வருவாய் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து மேற்கொள்வார்கள். இதற்கான செலவுகளை துறை மேம்பாட்டு நிதியிலிருந்து செலவிடப்பட உள்ளது. இதுபோன்ற சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் என்று கூறினார். பின்னர், நாளையும், வருகிற 8 ஆம் தேதியும் கொரோனா மெகா தடுப்பூசி முகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி முகாம்களுக்கு பொதுமக்களை அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் வருகையை அறிந்த சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பழுதடைந்த நிலையில் இருந்த தீயணைப்பு உபகரணங்களை ஒரு சில இடங்களில் மட்டும் தீயணைப்புத் துறையினர் மாற்றி வைத்தனர். இருப்பினும் பல இடங்களில் தீயணைப்பு உபகரணங்கள் முழுமையாக பழுதடைந்து உள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)