”ஆளுநரை சந்திக்கலாமா, வேண்டாமா?” கூட இருக்கும் அறிவாளிகளால் குழம்பும் விஜய்..!
”விஜய் மனைவி சங்கீதா திமுக குடும்ப உறுப்பினர்களிடம் நட்புடன் தொடர்ந்து பழகி வரும் நிலையில், இந்த விவகாரமும் விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது”
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, தமிழ்நாட்டில் தன்னுடைய அரசியல் எதிரி திமுக-தான் என்று அறிவித்துவிட்ட நிலையில், அடுத்து என்ன செய்யலாம் என்று தன்னுடைய அறிவார்ந்த ஆலோசனை குழுவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எப்படி திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தயாரித்துக்கொண்டு ஆளுநரை சந்தித்தாரோ அதே மாதிரி, ஒரு பட்டியலை எடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் கொடுக்கலாம் என்று ஐடியா கொடுத்திருக்கின்றனர்.
நேரடியாகவா ? இல்லை ரகசியமாகவா ? – குழப்பத்தில் விஜய்!
ஆனால், ஆளுநரை இப்போது நேரடியாக சந்தித்தால் தன்னை ஏற்கனவே பாஜக பி டீம் என சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமாக போய்விடும் என்று நினைத்த விஜய், அவரை ரகசியமாக எங்கேனும் சந்திக்க நேரம் கேட்கலாமா என்றும் யோசித்து வருகிறார். ஆனால், நேரடியாக அவரை சந்தித்து திமுக அமைச்சர்கள் குறித்து புகார் அளிக்கலாம் அப்போதுதான் அது பேசுபொருளாக மாறும், ஊடகங்களில் விவாத பொருளாகும் என அவருக்கு அரசியல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் வியூக நிபுணர்கள் விஜய்க்கு அறிவுரை வழங்கியுள்ளனர். ஆனாலும், இதுவரை எந்த விதமான நிலைபாடும் எடுக்க முடியாமல் விஜய் திணறி வருவதாகவே அவரது தரப்பிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
அண்ணாமலை வழியில் விஜய் ?
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு அமைச்சர் குறித்து விரிவான புலனாய்வு நடத்தி அவர்கள் குறித்து ஊழல் பட்டியலை பொதுவெளியில் வைத்து பின்னர் ஆளுநரிடம் சமர்பித்தது மாதிரி விஜயும் செய்தியாளர் சந்திப்பை நடத்தலாம் என்றும் அவரது ஆலோசர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால், அப்படி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினால், மாநாட்டு மேடைகளில் பேசியதுபோலவோ அல்லது ஆடியோ லாஞ்சுகளில் பேசுவது மாதிரியோ அவர் நினைத்ததை மட்டும் பேசிவிட்டு போக முடியாது என்பதை விஜய் உணர்ந்திருக்கிறார். செய்தியாளர்கள் கேட்கும் கிடுக்குப்பிடி கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டியிருக்கும். அவர் சொல்லும் ஒரு பதிலில் சிறு பிசகு ஏற்பட்டாலும் அது அவரது அரசியல் வாழ்க்கைக்கே எதிராக மாறிவிடும் அபாயம் இருக்கிறது என்பதையும் உணர்ந்திருக்கும் விஜய், தற்போது வேறு என்ன செய்யலாம் என்றும் தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார்.
மாநாட்டிற்கு பிறகு அமைதியா ?
பிரம்மாண்ட மாநாட்டை நடத்திமுடித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் விஜய், தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கும் நிலையில், வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று நாளோருமேனி பொழுதொரு வண்ணமாக சிந்தித்து வருவதாகவும், ஆனால், நீண்ட காலம் இப்படியே அமைதியாக இருந்தால் அது அரசியல் களத்தில் பலனளிக்காது என்றும் அவரது வியூக வகுப்பாளர்கள் விஜயிடம் கூறியுள்ள நிலையில், விரைவில் மண்டல வாரியாக கட்சி மாநாடுகளை போடலாமா என்றும் விஜய் ஆலோசித்துள்ளார். இந்நிலையில்தான், ஆளுநரை வைத்து பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவிற்கு எதிராக அரசியல் செய்வதுபோல், ஒரு புகாரை தயாரித்து கொடுக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. இதுதான் உள் அரங்க விவாதம் ஒரு சில நபர்கள் மூலம் வெளியே கசிந்து அது இப்போது ஊடகத்தில் வெளியாகும் அளவிற்கு வந்துள்ளது.
திமுக-வை எதிர்ப்பது எப்படி ?
கட்சித் தொடங்கி அரசியல் மாநாட்டையே நடத்தி முடித்துவிட்ட விஜய், தன்னுடைய கடைசி படமான, இன்னும் பெயர் கூட வைக்காத தளபதி 69 என்ற படப்பிடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால், ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் திமுக-வை எந்த வகையில் எதிர்ப்பது? எப்படியெல்லாம் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பது என்ற கேள்வி அவரை ஒவ்வொருநாளும் நெட்டித் தள்ளிவருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஒருவேளை, இனி பொதுவெளியிலோ அல்லது நேரடியாகவோ விஜய் திமுகவை விமர்சித்து பேசத் தொடங்கினால், அவரது கடைசி திரைப்படம் வெளியாவதில் சிக்கல் எழலாம் என்பதால், அடுத்த வரும் படம் வெளியாகும் வரையில் பெரிய அளவில் திமுகவை சீண்டாமல், அவ்வப்போது சில கண்டங்களோடு முடித்துக்கொள்ளலாமா அல்லது மிகப்பெரிய அளவில் எதிர்ப்பை தெரிவித்து, திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கலாமா என்பதிலுமே அவருக்கு குழப்பம் இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.
சங்கீதாவால் விஜய்க்கு சங்கடம்?
விஜய் திமுகவை எதிர்க்க துணிந்துவிட்ட நேரத்தில் அவரது மனைவி சங்கீதா திமுக குடும்ப உறுப்பினர்களிடம் நெருக்கமாக இருப்பதாகவும் விஜய்க்கு எதிராக அவரது செயல்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுறது. அதற்கு சமீபத்திய உதாரணமாக, முரசொலி செல்வம் உயிரிழந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த கோபாலபுரம் இல்லத்திற்கே சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் அவர் பேசிக்கொண்டிருந்த காட்சிகளும் ஊடகங்கள் மூலமாக வெளியே வந்தன. இந்நிலையில், சங்கீதா மூலம் விஜய்க்கு நெருக்கமான முக்கியமான நபர் ஒருவர் மாநாட்டிற்கு முன்னதாக திமுக தலைமையில் முக்கியமான நபரை சந்தித்து பேசியதாகவும் அது பற்றி மத்திய உளவுத்துறை உள்துறை அமைச்சகத்திற்கு நோட் அனுப்பியிருந்ததாகவும் அப்போது தகவல் வெளியானது.
சங்கீதாவின் இந்த நிலைபாடும் விஜய்க்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருவதால் அவருக்கு தொடர்ந்து கட்சியை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் நெருக்கடி நீடித்து வருகிறது.