Assembly Speaker Appavu: "அமைச்சர்களின் இலாகாவை மாற்ற முதலமைச்சருக்கே அதிகாரம்" - சபாநாயகர் அப்பாவு
அமைச்சர்களின் இலாகாவை மாற்ற முதலமைச்சருக்கே அதிகாரம் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
Assembly Speaker Appavu : அமைச்சர்களின் இலாகாவை மாற்ற முதலமைச்சருக்கே அதிகாரம் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
ஆளுநர் vs முதலமைச்சர்
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் இருப்பதால், அவரிடம் இருக்கும் இரு முக்கிய துறைகளை இருவேறு அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுக்க முடிவு எடுத்தார்.
அதன்படி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத்துறையும், வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்து அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஆளுநருக்கு பரிந்துறை கடிதமும் அனுப்பி இருந்தார். செந்தில் பாலாஜியின் இலாகாக்களை மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்க முதலமைச்சரின் பரிந்துரையை நிராகரித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறனர்.
"முதலமைச்சருக்கு தான் அதிகாரம்”
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது அமைச்சரவைக்கு யார் யாருக்கு என்ன துறை ஒதுக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக முதல்வருக்குத்தான் உள்ளது. அமைச்சரவை பரிந்துரை கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது வேதனையாக உள்ளது. அதை தவிர்த்திருக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நிலை சரியில்லை, வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின்படி நீதிமன்ற காவல், வழக்கு நிலுவையில் இருந்தால் அமைச்சர் பதவில் இருக்க கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை” என்றார்.
மேலும், ”வழக்கில் தண்டனை பெற்றால் மட்டும்தான் பதவியில் இருக்கக் கூடாது. தொடர்ந்து ஆளுநர் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மதசார்பற்ற நாடு என்று இருக்கிறது. அவர் வெளிப்படையாகவே இது மதச்சார்புள்ள நாடு தான் என்று கூறி வருகிறார்.” என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இவரை தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது, ”அரசியலமைப்பு சட்டப்படி மாநில அமைச்சர்கள் நியமனம் மற்றும் அவர்கள் வகிக்கும் இலாகா மாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டியது முதல்வரின் அதிகாரம். ஆளுநர் இதில் தலையிட அரசியல் சட்டத்தில் இடம் இல்லை. எனவே முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பியது கடும் கண்டனத்திற்குரியது" என்றார்.
மேலும் படிக்க