RN Ravi Meets PM Modi : ”ஆளுநர் – பிரதமர் சந்திப்பு – இருவரும் பேசியது என்ன?” வெளிவராத விவரங்கள்..!
"எடப்பாடி பழனிசாமியும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் கைகளை கோர்த்துக்கொண்டு மீண்டும் கூட்டணி என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை:”
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி சென்றார். அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன விவகாரம் தொடர்பாக கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், அவர் டெல்லி சென்றுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பு பேசு பொருளானது.
இந்நிலையில், பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதில், தமிழ்நாடு தொடர்பான பல முக்கிய விஷயங்களை பிரதமர் காதில் ஓதிவிட்டுள்ளதாக பரபரக்கிறது ராஜ்பவன் வட்டாரம்.
பிரதமரிடம் என்ன சொன்னார் ஆளுநர் ரவி. வெளிவராத விவரங்கள் இதோ
குறிப்பாக, தமிழ்நாட்டின் அரசியல் கள சூழல் தொடர்பாக பிரதமர் மோடியிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்துரைப்பதாகவும். அதுவும் அதிமுக – பாஜக கூட்டணியை மீண்டும் தமிழ்நாட்டில் அமைப்பது தொடர்பான விவகாரங்களை ஆளுநர், பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது.
அதுவும் அம்பேத்கர் குறித்து சர்ச்சையான கருத்துகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்ததற்கு தமிழ்நாட்டில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையான எதிர்வினையாற்றி, ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்திக்கொண்டிருப்பது பற்றியும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித் ஷா கருத்து குறித்து நேரடியாக எந்த பதிலும் அளிக்காமல், அமைச்சர் ஜெயக்குமாரை மட்டும் பின்னால் இருந்து இயக்கி, பேருக்கு ஒரு கண்டனத்தை பதிவு செய்ததையும் ஆளுநர் ரவி தன்னுடன் கையோடு எழுதி எடுத்து சென்ற நோட்ஸ்களை வைத்து பிரதமருக்கு விளக்கியுள்ளார்.
அடுத்த வித்தியாசாகர்ராவா ஆர்.என்.ரவி ? அதிமுக கூட்டணிக்கு அஸ்திவாரம் போடுகிறாரா?
அதனடிப்படையில் பார்த்தால், விரைவில் எடப்பாடி பழனிசாமியும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் ராஜ்பவனில் ஆளுநர் ரவி முன்னிலையில் வைத்தே கைலுக்கி, மீண்டும் கூட்டணியை வைத்துக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கிசுகிசுக்கிறது டெல்லி வட்டாரங்கள்
அதே நேரத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் சென்று வந்த பிறகு அவருடைய செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அவருக்கு எதிராக நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட சீனியர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், தன்னை சந்திக்க வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்ட விஷயங்களையும் அலசி ஆராய்ந்து உண்மையை என்ன என்பதை பிரதமரிடம் ஆர்.என்.ரவி எடுத்துரைத்துள்ளார் என கூறப்படுகிறது.
தமிழக பாஜகவில் மாற்றமா ?
மேலும், சமீபத்தில் அண்ணாமலை டெல்லி சென்ற திரும்பியதன் தொடர்ச்சியாகவே ஆளுநர் ரவியின் இந்த டெல்லி பயணம் அமைந்திருப்பதாகவும் தமிழக பாஜகவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே அதிமுக – பாஜக கூட்டணிக்கு மீண்டும் வரும் என்பதையும் ஆளுநர் ரவி, பிரதமரிடம் தெளிவாக் குறிப்பிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் மூத்த நிர்வாகிகளிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் ரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியதாகவும், அதில் ”அண்ணாமலையின் செயல்பாடுகளால்தான் நாங்கள் பாஜக கூட்டணியை விட்டு விலக நேர்ந்தது மற்றபடி, மத்திய பாஜகவை நாங்கள் இப்போதும் ஆதரிக்கும் மனநிலையில்தான் இருக்கிறோம்” என்று அவர்கள் தெரிவித்ததாகவும் வெளியான தகவலையும் பிரதமர் மோடியிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அதோடு, அண்ணாமலைக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் மத்திய புலனாய்வு அமைப்புகள் சோதனை நடத்தியது குறித்தும் ஆளுநர் ரவி, பிரதமரிடம் தெரிவித்திருப்பதாகவும் இதனால், விரைவில் தமிழக பாஜகவில் பல அதிரடி மாற்றங்கள் வரும் என்றும் டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.