EPS Vs Mutharasan: “உங்க அப்பாவே வந்தாலும் தோற்கடிக்க முடியாது“ - முத்தரசனுக்கு EPS பதிலடி
2026 தேர்தலில், தனது சொந்த தொகுதியிலேயே எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார் என கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு, இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

சேலத்தில் நேற்று நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார் எனவும், சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைவார் என்றும் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பதை தற்போது பார்க்கலாம்.
“உங்க அப்பாவே வந்தாலும் தோற்கடிக்க முடியாது“
வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அங்கு மக்களிடையே பேசினார். அப்போது, “கம்யூனிஸ்ட் கட்சியை தரம் தாழ்ந்து பேசுவதாக முத்தரசன் சொல்கிறார். நான் என்ன கேட்டேன் கம்யூனிஸ்ட் எதிர்க்கட்சியா அல்லது ஆளும்கட்சியா? எங்க வரிசையில் தான் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்றுதான் கேட்டேன்.
மக்களுக்கு பிரச்னை வரும்போது, அதை அரசுக்கு எடுத்துச்செல்ல வேண்டும், கூட்டணியாக இருந்தாலும் குரல் கொடுக்க வேண்டும், அதைத்தான் சுட்டிக்காட்டினேன். ஆனால் அவருக்கு கோபம் வந்து ஏதேதோ பேசியிருக்கார். அதுமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் பணம் வாங்கியதாக நான் சொன்னதாகச் சொல்கிறார். அதை நாங்கள் சொல்லவில்லை. உங்களைக் காட்டிக்கொடுத்ததே திமுகதான். நாங்கள் சொல்லவில்லை. செய்தி வெளியானதா இல்லையா? தேர்தல் நிதி கொடுக்கப்பட்டதா… இல்லையா?“ என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “பாஜகவுடன் கூட்டணி வைத்ததை தப்பு என்கிறார் முத்தரசன். திமுக கூட பாஜகவோடு கூட்டணி அமைத்து மத்தியில் அங்கம் வகித்தது எல்லாம் முத்தரசனுக்குத் தெரியவில்லை. அதை பேசுவதற்கு முடியாத அவருக்கு, எங்களைப் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியுமில்லை. அதோடு, 2026 தேர்தலில் உங்கள் சொந்தத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார் என்கிறார் முத்தரசன். உங்க அப்பாவே வந்தாலும் முடியாது“ என்று முத்தரசனுக்கு பதிலடி கொடுத்தார்.
“விழித்துக்கொள்ளாவிட்டால் யாராலும் காப்பாற்ற முடியாது“
தொடர்ந்து பேசிய அவர், “2021 ஆண்டிலேயே சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை நாங்கள் வென்று காட்டினோம், எடப்பாடி தொகுதியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியும் இல்லாமல் எடப்பாடி தொகுதியில் 45 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருக்கிறோம். நாங்கள் மக்களுக்காக உழைத்திருக்கிறோம். மக்கள் எங்களுக்கு விசுவாசமாக இருந்து வாக்களிப்பார்கள்“ என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேலும், “உங்களைப் போல காலத்துக்கேற்ப நிறம் மாறுகின்ற கட்சி அதிமுக அல்ல, பச்சோந்தி போல் நிறம் மாறுவதில்லை. கொள்கையின் அடிப்படையில்தான் செயல்படும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்துக்கு மட்டும்தான். நீங்கள் கொள்கை என்கிறீர்கள், திமுகவும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரே கொள்கையா.?“ என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, “நேற்றைக்கு முன் தினம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் ஸ்டாலின் பேசும்போது, ‘நான் பாதி கம்யூனிஸ்ட்’ என்கிறார். அப்படியென்றால் பாதியை விழுங்கிவிட்டார்“ என்று அவர் விமர்சித்தார்.
அதோடு, “கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான் சொல்வது இதுதான். திமுக தவறுக்கு துணை போகாதீர்கள், உங்களுக்கென தனிச் செல்வாக்கு உள்ளது. அது சரிந்துகொண்டு வருகிறது என்று சொன்னேன். தன்னை பாதி கம்யூனிஸ்ட் என்கிறார் ஸ்டாலின், அதாவது பாதியை விழுங்கிவிட்டார் ஸ்டாலின். இனியும் நீங்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது“ என கூறினார் எடப்பாடி பழனிசாமி.





















