Asia Cup 2025: ஸ்ரேயஸ் ஐயர் இல்லாத இந்திய அணி.. 600 ரன்கள் அடித்தும் இடம் இல்லை.. இளம் வீரருக்கு செக்
ஆசிய கோப்பை தொடரில் ஸ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2025 ஆசிய கோப்பை தொடருக்கான அணித் தேர்வில் ஸ்ரேயஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் புறக்கணிக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை டி20 வடிவிலான ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் இரு பிரிவிலும் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் 28ம்தேதி பைனலில் மோதும். இந்நிலையில், சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு ஸ்ரேயஸ் ஐயரை தேர்வு செய்ய விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், அணியின் தற்போதைய காம்பினேஷன்தான் என்றும் கூறப்படுகிறது.
டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் இளம் வீரர்களான திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோர் தங்களது இடத்தை சிறப்பாக தக்க வைத்துக்கொண்டனர். அதேபாேன்று டாப் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், அபிஷேக் ஆகியோரை களம் இறக்குவதிலும் உறுதியாகிவிட்ட நிலையில், ஸ்ரேயஸ் ஐயரை தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்திருக்கிறது. 2025 ஐபிஎல் தொடரில் ரன் மழை பொழிந்து, பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றவர் ஸ்ரேயஸ் ஐயர். ஆனால், ஆசிய கோப்பைக்கான இந்திய டி20 அணியில் இடம் பெற மாட்டார் என்ற செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 17 போட்டிகளில் 600 ரன்கள் 175 ஸ்ட்ரைக் ரேட்டில் மிரட்டியிருக்கும் ஸ்ரேயஸ் ஐயரை நிராகரிப்பதா என்றும் ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
அவரை தொடர்ந்து ஜெய்ஸ்வாலும் இடம்பெறமாட்டார் என கூறப்படுகிறது. டெஸ்ட் தொடரில் சிற்பபாக விளையாடியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய தேர்வுக்குழு ஜெய்ஸ்வாலிடம் டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாம். ஆகவே இனி டி20 பக்கமே வரமாட்டாரா என்பதே அனைவரது கேள்வியாக மாறியிருக்கிறது.





















