போப் ஆண்டவருக்கு நிகரானவர் கருணாநிதி.. தங்கம் மாதிரி ஜொலித்த எம்ஜிஆர்.. சினிமா பிரபலம் ஓபன் டாக்
சிறகடிக்க ஆசை சீரியலின் வசனகர்த்தா குரு சம்பத்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் எம்ஜிஆர் குறித்து பேசியது வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது வசனமும், கதையும் தான். டிஆர்பியிலும் இந்த சீரியல் டாப் ஆர்டரில் இருக்கிறது. நாளுக்கு நாள் பரபரப்பான எபிசோடுகளுடன் கதையை நகர்த்தி செல்வது ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது. இந்நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலின் வசனகர்த்தா குரு சம்பத்குமார் சினிமா நடிகர் சித்ரா லட்சுமணனுடன் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் அளித்த நேர்காணல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
தங்கம் மாதிரி ஜொலித்த எம்ஜிஆர்
இந்த நேர்காணலில், தனது சிறு வயதில் இருந்தே கதை எழுதும் பழக்கம் இருந்தது. சினிமாவுக்குள் வருவதற்கு முன்பு தான் சந்தித்த சவால்களையும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தும் பேசியிருப்பது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, என் வீட்டில் வறுமை, என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் இயக்குநராக ஆசைப்பட்டு தான் சென்னை வந்தேன். கலைஞர் கருணாநிதி மற்றும் கண்ணதாசன் எழுத்துக்கள் தான் என்னை வளர்த்தது. கண்ணதாசன் பாட்டை கேட்டால் மெய்மறந்து போவேன். தமிழுக்கு சிறப்பு என்றால் அவங்கதான். என் சின்ன வயதில் புதுக்கோட்டைக்கு எம்ஜிஆர் வருவார்னு சொன்னாங்க. நான் எங்க குடும்பத்தோட காத்திட்டு இருக்கோம். எம்ஜிஆரை பார்ப்பதற்காகவே வந்த கூட்டம் கலையவே இல்லை. அவர் வர 3 நாள் ஆச்சு. 3 நாளா அந்த கூட்டம் அப்படியே தான் இருந்தது. முதல் முறையாக எம்ஜிஆரை பார்க்கிறேன். அப்படியே தங்கம் மாதிரி தக தக ஜொலிக்கிறாரு. என்ன ஒரு அழகு என குரு சம்பத்குமார் தெரிவித்தார்.
சின்னத்திரையில் வெற்றிப் பயணம்
மேலும் பேசிய அவர், பத்திரிகையாளராக இருந்தப்போ நிறைய சினிமா செலிபிரட்டியை இண்டர்வியூ எடுத்திருக்கேன். எனக்கு இசையமைப்பாளர் இளையராஜாவை பேட்டி எடுக்க ஆசை. ஆனால், அவர் பேட்டியை கொடுக்க மாட்டாரு ரொம்ப பிஸியாக இருந்தாரு. அந்த நேரத்தில் ஏவிஎம்மில் சொந்தம் என்ற சீரியல் எடுத்தாங்க, அதுதான் நான் முதல் முறையாக வசனம் எழுத தொடங்கியது. அதுக்கப்புறம் இளவரசி, ரோஜா, இலக்கியா, அவர்கள் அப்படி நிறைய சின்னத்திரை சீரியல்களுக்கு கதை எழுதி வருகிறேன். சின்னத்திரை வசனகர்த்தா என்ற அடையாளமும் கிடைத்திருக்கிறது.
கலைஞரை பார்த்தது என் பாக்கியம்
80களில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவுடன் சேர்ந்து திமுகவிற்காக தேர்தல் பணியெல்லாம் செய்திருக்கிறேன். கலைஞர் வீட்டை சுத்தி தினமும் 300 பேர் நிப்பாங்க. நம்மலை எப்படி கண்டுக்குவார்னு நினைத்தேன். கலைப்புலி எஸ்.தாணு சாரால் தான் எல்லாம் நடந்தது. அவர்கூட இருந்து கலைஞரை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. ஒரு நாள் தொண்டர்கள் கருணாநிதிகிட்ட போட்டோ எடுக்க வரிசையில் நிக்குறாங்க. அவரும் போஸ் கொடுத்துட்டு இருக்காரு. அப்போ ஒரு ஆட்டோக்காரர் சவாரிக்காக வந்தவரு, கருணாநிதியை பார்த்ததும் அவரை பார்க்க முந்தியடிச்சு நிக்குறாரு. போலீசால கன்ட்ரோல் பண்ண முடியலை, இதை எப்படியோ கருணாநிதி பார்த்துட்டாரு, அந்த செகண்ட் கருணாநிதி ஒன்னு பன்றாரு பாருங்க என் லைஃப்ல மறக்க முடியாது சார் என குரு சம்பத்குமார் தெரிவித்தார்.
போப் ஆண்டவருக்கு நிகாரனவர் கருணாநிதி
மேலும் பேசிய அவர், கருணாநிதியை பத்தி உலகமே போற்றி வணங்குது. போப் ஆண்டவருக்கு இணையான தலைவராக இருந்தவர் கருணாநிதி. அவ்வளவு கூட்டத்திலும் அங்கே இருந்த ஆட்டோக்காரரை பார்த்து, என்னயா போட்டோ எடுக்கணுமா என கேட்கிறார். அதற்கு அந்த ஆட்டோக்காரர் ஆமா, என்றதும் கொஞ்சம் கூட யோசிக்காமல், வா வந்து எடுத்துக்க என்று கருணாநிதி கூறவும், அந்த ஆட்டோக்காரருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. தினகரன் ரிப்போர்ட்டர் தான் அதை போட்டோ எடுக்குறார். போட்டோ எடுத்து முடிந்ததும் தினகரன் ரிப்போர்ட்டரை பார்த்து, நாகராஜ் இதுல ஒரு காபி ஆட்டோக்காரருக்கு அனுப்பிடு என்று கருணாநிதி சொன்னார். இதெல்லாம் நேர்ல பாக்கும் பாக்கியம் கிடைத்தது. என் வாழ்வில் மறக்க முடியாது. அவர் உண்மையில் போப் ஆண்டவருக்கு நிகரான தலைவர் என குரு சம்பத்குமார் கருணாநிதியை புகழ்ந்து பேசினார்.





















