IIT Madras: ஐஐடி சென்னை சாதனை: இந்தியாவின் முதல் சிலிக்கான் QRNG! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி!
ஐஐடி சென்னை இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி தலைமையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி சென்னை), ரூ.1 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்தியாவின் முதலாவது சிலிக்கான் ஃபோட்டானிக்ஸ் அடிப்படையிலான அதிவேக குவாண்டம் ரேண்டம் எண் ஜெனரேட்டரை (QRNG) உள்நாட்டிலேயே உருவாக்கி உரிமம் வழங்கியிருக்கிறது.
சிலிக்கான் ஃபோட்டானிக் அதிவேக குவாண்டம் ரேண்டம் எண் ஜெனரேட்டரை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்காக ஐஐடி சென்னையின் தொழில்நுட்பப் பரிமாற்ற அலுவலகம் (TTO). இந்திரர்கா குவாண்டம் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இன்று (18 ஆகஸ்ட் 2025) உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
என்ன அம்சங்கள்?
ஐஐடி சென்னையில் உள்ள புரோகிராமபிள் ஃபோட்டானிக் ஒருங்கிணைந்த சுற்றுகள் மற்றும் அமைப்புகளுக்கான மையத்தில் (Centre for Programmable Photonic Integrated Circuits and Systems – CPPICS) புரோகிராமபிள் ஃபோட்டானிக் ஒருங்கிணைந்த சுற்றுகள் மற்றும் அமைப்புகளுக்கான மையத்தில் (CPPICS) உருவாக்கப்பட்ட இந்த மைல்கல், தொழில்நுட்பத்தின் மூலோபாய மதிப்பையும் இந்தியாவின் குவாண்டம் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கான அதன் திறனையும் எடுத்துக்காட்டுகிறது.
முன்னதாக, QRNG தொகுதியின் முன்மாதிரி (prototype) பதிப்பு இந்திய அரசின் DYSL-QT DRDO-விடம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, QRNG தொகுதியின் மேம்பட்ட பதிப்பு உருவாக்கப்பட்டு குவாண்டம் பாதுகாப்பு பயன்பாடுகளுக்காக மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தில் (SETS சென்னை) வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஐஐடி சென்னை இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி தலைமையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இத்தொழில்நுட்பத்தின் களசெயலாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இந்திரர்கா குவாண்டம் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குனர் தீனாநாத் சோனி கூறுகையில், “இந்தியாவின் முதலாவது சிலிக்கான் ஃபோட்டானிக்ஸ் அடிப்படையிலான QRNG-ஐ சந்தைக்குக் கொண்டுவருவதில் ஐஐடி சென்னையுடன் கூட்டு சேருவதில் எங்களுக்குப் பெருமை. புரட்சிகரமான இத்தொழில்நுட்பம் குவாண்டம் பாதுகாப்பு தீர்வுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதுடன் மேக் இன் இந்தியா முயற்சியின் வெற்றியையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்த உள்நாட்டு கண்டுபிடிப்பை முக்கியமான துறைகளில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கும், குவாண்டம் பாதுகாப்பில் உலகளாவிய தலைவராக இந்தியாவை நிறுவுவதற்கும், தொழில்நுட்ப சுயசார்பு குறித்த நமது நாட்டின் பார்வையை முன்னேற்றுவதற்கும் நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம்” என்றார்.
QRNG தொழில்நுட்பம் பின்வரும் துறைகளில் முக்கியமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது:
ராணுவம் மற்றும் பாதுகாப்புக்கான தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு
கிரிப்டோகிராஃபிக் வழிமுறைகள்
குவாண்டம் விசை விநியோகம் (QKD)
அறிவியல் மாதிரிப்படுத்துதல் மற்றும் உருவகப்படுத்துதல்கள்
நிதி பரிவர்த்தனைகள், பிளாக்செயின் மற்றும் ஓடிபி உருவாக்கம்
கேமிங் பயன்பாடுகள்
இவ்வாறு ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.





















