போக்குவரத்து கழக தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: உடனே தெரிஞ்சுக்கோங்க! அண்ணா பல்கலை. அறிவிப்பு
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வுக்கான முடிவுகள் நாளை (20.08.2025 அன்று) https://tancet.annauniv.edu/tancet/irt/index.php இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வு முடிவுகள் நாளை (ஆக. 20) வெளியாக உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்காக சாலை போக்குவரத்து நிறுவனம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டது. குறிப்பாக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் (DRIVER CUM CONDUCTOR) தேர்வு 27.07.2025 அன்று நடந்தது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் 43 தேர்வு மையங்களில் 22,492 பேர் தமிழ்நாடு முழுவதும் எழுத அனுமதிக்கப்பட்டனர். 3,274 காலி பணியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு எழுதியோர் / எழுதாதோர் விவரங்கள்
அதில் தேர்வு எழுத வராதவர்கள் - 3087. தேர்வு எழுத வந்தவர்கள் – 19405 ஆவர்.
தேர்வு முடிவுகள் எப்போது?
இந்த தேர்வுக்கான முடிவுகள் நாளை (20.08.2025 அன்று) https://tancet.annauniv.edu/tancet/irt/index.php இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்ப எண் (Application Number) அல்லது பதிவு எண் (Registration Number), பிறந்த தேதி (Date of Birth), கேப்ச்சா-Captcha ஆகிய மூன்றையும் பதிவு செய்து தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த தேர்வுக்கான கேள்வி மற்றும் உத்தேச விடைக் குறிப்புகள் 13.08.2025 அன்று இணையத்தில் வெளியிடப்பட்டன.
OMR விடைத் தாளுடன் பதிவேற்றம்
நிபுணர் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடை குறிப்புகள் மற்றும் தங்களுடைய தேர்வு முடிவுகள், தங்களுடைய OMR விடைத் தாளுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வாளர்களின் தேர்வு முடிவுகளும் பதிவு எண் வரிசைப் படியும் வெளியிடப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://tancet.annauniv.edu/tancet/irt/index.php தொடர்பு கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் நுழைவு தேர்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.






















