இபிஎஸ்ஸுக்கு வரவேற்பு மட்டும்தான்.. ஆதரவெல்லாம் இல்லை; நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டி- சீமான்
தமிழராக பிறந்த அனைவரும் தமிழர் இல்லை எனவும் தமிழ் இனத்திற்காக போராடுபவர்கள்தான் தமிழர்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடப்போவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறுகையில், நாம் தமிழர் கட்சி வரும் 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார். மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக நேற்று அதாவது செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ”அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது நிரந்தரமானதாக இருக்கும்” என நம்புவதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் திமுக தலைமையில் I.N.D.I.A கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி மற்றும் பிற கட்சிகள் எனவும் தேர்தல் களம் மாறியுள்ளது.
மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், எடப்பாடி பழனிசாமி தமிழர், அவருடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பீர்களா என கேள்வி எழுப்பபட்டபோது, தமிழராகப் பிறந்த அனைவரும் தமிழர் இல்லை எனவும் தமிழ் இனத்திற்காக போராடுபவர்கள்தான் தமிழர்கள் என சீமான் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ் மீட்சியே தமிழர் எழுச்சி என்ற தேவநேயப்பாவணாரின் கோட்பாட்டினை ஏற்று எடப்பாடி பழனிசாமி வருவாரா? தமிழகத்தின் தமிழ் தெரு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கோட்பாட்டிற்கு வருவாரா? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணி முறிவு
அதிமுக தலைவர்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இதனால், அதிமுக கூட்டணயில் பாஜக இல்லை என்று அதிமுக தலைவர்கள் கூறிக் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்தே ஆக வேண்டும். அதிமுக தலைமையில் திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணியை தனித்தே உருவாக்குவோம் என பெரும்பான்மை மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் கூறினர்.
தீர்மானத்தில் என்ன இருக்கு?
இதனை அடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 - திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.