Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
நாம் தமிழர் கட்சியினர் 3 ஆயிரம் பேர் இன்று கட்சியில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்திருப்பது சீமானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் நன்கு வளர்ச்சியடைந்த கட்சியாக திகழ்வது நாம் தமிழர். தமிழ் தேசியத்தை முன்னெடுத்து அரசியல் செயல்பாட்டுகளை கொண்டு வரும் சீமானின் பேச்சுகள் பலவும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், ஒவ்வொரு தேர்தலிலும் அவரது கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது.
அடுத்தடுத்து விலகும் நாம் தமிழர் நிர்வாகிகள்:
இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் மட்டுமின்றி புதியதாக உருவாகியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் போட்டியாக மாறியுள்ளது. விஜய் தனது கொள்கைகளை அறிவிக்கும் முன்னர், இருவரும் கூட்டணி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய்யின் கொள்கைக்கு பிறகு தவெக-வுடன் சீமான் மோதல் போக்கை மேற்கொண்டு வருகிறார்.
இதனால், தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் சீமானையும், நாம் தமிழர் கட்சியினரையும் கடுமையாக இணையத்தில் விமர்சிக்கத் தொடங்கினர். சீமான் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியில் இருந்து பலரும் விலகி வந்தனர். விஜய் கட்சி தொடங்கிய பிறகு பலரும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.
தி.மு.க.வில் இணைந்த 3 ஆயிரம் நா.த.க.வினர்:
இந்த சூழலில், சீமான் பெரியார் குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் மோதலை தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. இதனால், சீமானுக்கு எதிராக திராவிட காெள்கைகளைப் பின்பற்றும் பலரும் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். மேலும், பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் போலி என்றும், அதைத் தான் எடிட் செய்ததாக சங்ககிரி ராஜ்குமார் கூறியதும் சீமானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், நாம் தமிழர் கட்சியின் அரசியல் எதிரியான தி.மு.க.வில் இன்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி 3 ஆயிரம் பேர் இணைந்திருப்பது சீமானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 51 பேர் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆவார்.
பின்னடைவில் நாம் தமிழர்:
சீமான் தன்னிச்சையாக செயல்படுவதன் காரணமாகவே நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியில் இருந்து இத்தனை ஆயிரம் உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்திருப்பது நாம் தமிழர் கட்சியினருக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சீமானின் செயல்பாடு மற்றும் விமர்சனம் காரணமாக நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவது, 2026ம் ஆண்டு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், கட்சியின் தூணாக விளங்கிய மாவட்ட பொறுப்பாளர்கள் 51 பேர் தி.மு.க.வில் இணைந்திருப்பது கட்சியை பலவீனமாக்குவதற்கு அதிக வாய்ப்பையும் உண்டாக்கியுள்ளது.
சிக்கலில் சீமான்:
சட்டமன்ற தேர்தலில் சீமானுக்கு உறுதுணையாக இருப்பார் என்று கருதப்பட்ட விஜய்யுடனும், சீமான் மோதல் போக்கை கொண்டு வருவதும், விஜய்யும் சீமானை பெரியளவில் கண்டுகொள்ளாமலே இருப்பதும் சீமான் ஆதரவாளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வந்த நிலையில், இன்று மட்டும் 3 ஆயிரம் நிர்வாகிகள் தி.மு.க.விற்கு தாவியிருக்கும் நிலையில் உடனடியாக கட்சியில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு சீமான் ஆளாகியுள்ளார். மேலும், இனியும் நிர்வாகிகள் விலகினால் அது சீமானையும், நாம் தமிழரையும் மிக கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்க நேரிடும் என்பதும் உறுதி. இதனால், இனி வரும் நாட்களில் சீமானின் செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

