காவிரி ஆற்றுக்கரையோர மக்களே எச்சரிக்கை... வெள்ள அபாயம்: ஆறுகளில் இறங்காதீங்க
காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது.

திருச்சி: காவிரி கரையோர மக்களே கவனம்... வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கி குளிக்காதீங்க என்று திருச்சி கலெக்டர் சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள், நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, துங்கபத்ரா அணை உள்ளிட்டவை நிரம்பி வருகிறது.
இதன் காரணமாக இந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து கடந்த 2 நாட்களாக உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நிரம்பியது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 120 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 500 கனஅடியாக இருந்தது. இதையடுத்து நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியும், 16 கண்மதகு வழியாக வினாடிக்கு 82 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 1 லட்சம் கனஅடிதண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதுபோக கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து இன்று 2-வது நாளாகவும் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளதால் காவிரி ஆறு வெள்ளக்காடானது. ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுவதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து 11 மாவட்ட கலெக்டர்களுக்கும் மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் தகவல் கொடுத்து உள்ளார். இதையடுத்து காவிரி கரையோர பகுதிகளை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால், அணையிலிருந்து உபரி நீரானது சுமார் 75,000 கன அடி தற்போது திறந்துவிடப்படுகிறது. காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உபரி நீரானது இன்று 28ம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டம், முக்கொம்பு வந்தடைந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் முழுமையாக திறந்து விடப்பட உள்ளது. எனவே, காவிரி, கொள்ளிட கரையோர பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சலவைத்தொழிலாளர்கள், பொதுமக்கள் தங்கள் உடமைகளுடன் மேட்டுப்பாங்கான, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமான படித்துறைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கிராமங்களில் தங்கியிருந்து கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
நீர்வரத்து அதிகமாக வரும் என்பதால் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற முறையில் கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ “செல்பி” (Selfie) எடுக்க கூடாது.
குழந்தைகள் நீர்நிலைகளில் இறங்கா வண்ணம் கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும். கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கு நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம். பாலங்கள் தவிர, பாதுகாப்பற்ற இடங்களில் ஆற்றை கடக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஒரு அணியும், மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஒரு அணியும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முகாமிட்டு தயார் நிலையில் உள்ளனர். இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.





















