Actor Sivakumar Exclusive: ‘நான் காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறேனா?’ நடிகர் சிவக்குமார் விளக்கம்..!
ஏற்கனவே, முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த மறைந்த ஞானதேசிகன் ஏற்பாட்டில் நடைபெற்ற கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் விழாவிலும் நடிகர் சிவக்குமார் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
நாட்டின் 75வது சுதந்திர தினமான நேற்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் சென்ற பழம்பெரும் நடிகர் சிவக்குமார், அங்கு நடைபெற்ற கைராட்டை திறப்பு விழாவில் பங்கேற்றதுடன், காங்கிரஸ் கட்சியினர் அணியும் குல்லாவையும் அணிந்திருந்தார். இந்நிலையில், விரைவில் நடிகர் சிவக்குமார் சோனியா, ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணையப்போகிறார் என்ற தகவல் தீயாக பரவியது.
இதனையடுத்து, ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு விளக்கம் அளித்துள்ள நடிகர் சிவக்குமார் ‘அரசியலில் சேர்வதென்றால் காமராஜர், அண்ணா காலத்திலேயே சேர்ந்திருப்பேன்’ என்று கூறியதோடு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் மட்டும்தான் சத்தியமூர்த்திபவனுக்கு சென்று 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டுமா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். விழா முடிந்த பிறகு மகாத்மா காந்தியை அட்டைப்படமாக வைத்து தான் வரைந்து வெளியிட்ட ஓவியங்களின் தொகுப்பையும் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் வழங்கினார் சிவக்குமார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஏற்கனவே, சத்தியமூர்த்திப்பவனில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த மறைந்த ஞானதேசிகன் ஏற்பாட்டில் நடைபெற்ற கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் விழாவிலும் நடிகர் சிவக்குமார் பங்கேற்று பேசியது நினைவுக்கூறத்தக்கது. கம்பன் கழக விழா, தமிழ், தமிழர் பண்பாடு, வள்ளலார், மகாபாரதம், இராமாயணம் தொடர்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தன் சொல்லாற்றல் மூலம் அனைவரையும் கட்டிப்போடும் திறன் வாய்ந்த நடிகர் சிவக்குமார், திரைத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்தாலும், ஓவியம் வரைவதில் பெரும் ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது