”மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர EPS முடிவு?” அதிருப்தியில் அதிமுக நிர்வாகிகள்..!
”ஆட்சியை பிடிப்பதற்காக மீண்டும் பாஜக-வுடன் கூட்டணி வைப்பதாக இருந்தால், அதன்பிறகு அதிமுக-வால் தமிழ்நாட்டில் ஆட்சியையே பிடிக்க முடியாத சூழல் எழுந்துவிடும் என்று அதிமுக நிர்வாகிகள் அச்சப்படுகின்றனர்”
பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று கூட்டணியில் இருந்து விலகியது முதல் தொடர்ந்து சொல்லி வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இப்போது அப்படியே அதற்கு எதிராக குட்டிக்கரணம் அடித்து ஒத்துக் கருத்து கொண்ட கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணிக்கு வரலாம் என்று தெரிவித்திருப்பது நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாஜக பக்கம் சாயும் பழனிசாமி – பதற்றத்தில் ர.ர.க்கள்
2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று கடந்த ஆண்டு நெல்லையில் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, நேற்று திருச்சியில் அளித்த பேட்டியில் அதற்கு நேர்மாறான கருத்தை தெரிவித்திருக்கிறார். இதனால், மீண்டும் பாஜக பக்கம் எடப்பாடி பழனிசாமி சாய்கிறாரா என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சிறுபான்மையினர் வாக்குகளை பெறமுடியாமல் தோற்றது என்பதால், அந்த கூட்டணியில் இருந்து விலகும் தைரியமான முடிவை கடந்த ஆண்டு மாவட்ட செயலாளர்கள் / தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் எடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் எடப்படி பழனிசாமி. இந்த முடிவு அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது. ஆனால், தற்போது அந்த முடிவில் இருந்து எடப்பாடி பழனிசாமி பின்வாங்குவது மாதிரியாக நேற்றைய அவரது பேட்டி இருந்ததால், ரத்தத்தின் ரத்தங்கள் மீண்டும் பதற்றமான மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
என்ன நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி ? ஏன் இந்த மாற்றம் ?
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை ; எதிரியும் இல்லை என்பது பொதுமொழியாக இருந்து வரும் நிலையில், கட்சிகளை பொறுத்தவரை கொள்கைகளை கடந்து வெற்றியும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுமே இலக்காக இருந்து வருகிறது. இந்நிலையில், பாஜகவும் கடந்த கால தேர்தல்கள் மூலம் கணிசமான வாக்கு வங்கியை தமிழ்நாட்டில் பெற்றுள்ளது. இதனை கருத்தில்கொண்டே பாஜகவிற்கான கதவை மீண்டும் எடப்பாடி பழனிசாமி திறக்க முனைந்திருப்பதாக கூறப்படுகிறது.
2026ல் நடைபெறவிருக்கும் தேர்தல் சட்டப்பேரவைக்கான தேர்தல் என்பதால் நம்முடைய பிரதான எதிரி திமுக-தான் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்படி பழனிசாமி பேசியிருந்தார். அதனை அடியொற்றியே அவரது திருச்சி செய்தியாளர் சந்திப்பும் அமைந்துள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்ற, பாஜக, பாமக உள்ளிட்ட முக்கியமான கட்சிகளை அதிமுக கூட்டணிக்குள் மீண்டும் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி நினைப்பதாக அவருக்கு நெருக்கமான நபர்கள் தெரிவிக்கின்றனர்.
விஜய் தலைமையை அதிமுக ஏற்குமா ?
அதே நேரத்தில் புதிதாக கட்சித் தொடங்கியுள்ள நடிகர் விஜய், தன்னுடைய தலைமையில் கூட்டணி என்று அறிவித்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டை பல ஆண்டுகள் ஆண்ட மிகப்பெரிய திராவிட கட்சிகளுள் ஒன்றான அதிமுக எப்படி அவரது தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்குள் செல்லும்? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்து வந்ததது. இந்நிலையில்தான், விஜய் தலைமையை அதிமுக ஏற்காது என்றும் அதிமுக தலைமையிலேயே 2026ல் கூட்டணி அமைக்கப்படும் எனவும் அதனை ஏற்று எந்த கட்சி வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார் என்ற பாணியில் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதாவது, விஜய் அதிமுக தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்குள் வந்தால் ஒகே, இல்லையென்றால், இருக்கவே இருக்கிறது பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் என்பதுதான் அவரது தற்போதைய அரசியல் கணக்காக இருக்கிறது.
பாஜக பக்கம்செல்லும் எடப்பாடி பழனிசாமி ; பலிக்குமா அவர் கனவு ?
பாஜகவுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று அதிமுக தலைமை சொன்னது தலைமைக் கழக நிர்வாகி முதல் கடைமட்ட தொண்டர் வரை ஆதரித்து, வரவேற்றார்கள். ஆனால், இப்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி, தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதே இலக்கு என்று ஒன்றரை ஆண்டுகளுக்குள் எதிர்மாறான முடிவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தால் அதனை அதிமுகவினர் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது ?
ஆட்சியை பிடிப்பதற்காக மீண்டும் பாஜக-வுடன் கூட்டணி வைப்பதாக இருந்தால், அதன்பிறகு அதிமுக-வால் தமிழ்நாட்டில் ஆட்சியையே பிடிக்க முடியாத சூழல் எழுந்துவிடும் என்று அதிமுக நிர்வாகிகள் அச்சப்படுகின்றனர். எடப்பாடி பழனிசாமியுடனான இந்த மாற்றம் அதிமுக தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.