பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
நகரப் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால், மாணவி பேருந்து பின்னால் ஓடி சென்ற சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் முனிராஜ் பணியிடை நீக்கம், தற்காலிக நடத்துநர் அசோக் குமார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே அரசு பேருந்திற்காக காத்திருந்த பள்ளி மாணவி பேருந்து நிற்காததால், பேருந்தில் ஏறத் தலைதெறிக்க ஓடிய பள்ளி மாணவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஜமுனாமரத்தூர் செல்லும் அரசுப் பேருந்து, கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. அப்போது, கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்திற்காக நின்றிருந்த பள்ளி மாணவி அரசுப் பேருந்து நிற்காததால், பேருந்தில் ஏற முயன்று தலைதெறிக்க ஓடினார்.
சமூக வலைதளங்களில் வைரல்
பின்னர் அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டு, மாணவி பேருந்தில் ஏறிச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
நகரப் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால், மாணவி பேருந்து பின்னால் ஓடி சென்ற சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் முனிராஜ் பணியிடை நீக்கம், தற்காலிக நடத்துநர் அசோக் குமார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை ஆம்பூர் போக்குவரத்து பணிமனை பொது மேலாளர் கணபதி பிறப்பித்து உள்ளார். பேருந்து ஓட்டுநர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ’’25/03/2025 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியில் “பேருந்தை நிறுத்தாததால் பின்னால் ஓடிய பிளஸ் 2 மாணவி” எணும் தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது"
கைக்காட்டிய நிலையிலும் பேருந்தை நிறுத்தாமல்
மேற்படி தொலைக்காட்சியில் வெளியான செய்தியில் குறிப்பிட்டுள்ள பேருந்து எண் 1132112389, தடம் எண் 10, வேலூர் மண்டலம், ஆம்பூர் கிளையில் இன்று காலையில் இப்பேருந்து வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து நடை எடுத்து ஆலங்காயம் செல்லும் வழியில் கொத்தகோட்டை கிராமம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏறுவதற்காக பள்ளி மாணவி ஒருவர் கைக்காட்டிய நிலையிலும் பேருந்தை நிறுத்தாமல் சிறிது தூரம் செண்று பேருந்தினை நிறுத்தி மாணவியை பேருந்தில் ஏற்றியுள்ளார்.
மாணவி பேருத்தில் ஏறுவதற்காக பேருந்தின் பின்னால் ஓடிச்சென்ற காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக இருந்த ஆம்பூர் பணிமனையை சார்ந்த பேருந்து ஓட்டுநர் முனிராஜ் பணி எண் 42069 உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது துறைரீதியான தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






















