BJP "நிதி வேண்டும் என்றால் நீதிமன்றம் செல்லட்டும்" திமுகவுக்கு இராம ஸ்ரீனிவாசன் பதிலடி
BJP : தமிழகத்தில் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் இந்தி இருக்கிறது. ஆனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே இந்தி இல்லை என விமர்சித்தார்.

சேலம் மாநகர் மரவனேரி பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில், பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "பட்ஜெட்டிலேயே நிறைய புரட்சிகளை செய்துள்ளார் பிரதமர் மோடி. எட்டாவது முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளார். இது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணம் என்றார்.
பிரதமர் குறித்து விகடன் மின் இதழில் வெளியான கார்டூன் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாடு முதல்வரும் மத்திய அரசை கண்டித்து பேசி உள்ளார். இந்திய மண்ணுக்குள்தான் அரசியல் இருக்க வேண்டும். வெளியே சென்றால் பிரதமர் நமது அடையாளம். தமிழக பாஜக, விகடன் குழுமத்தின் செயலை கண்டிக்கிறது என்றார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று திமுக அரசு திட்டவட்டமாக சொல்கிறது. பாஜக ஆளாத கேரளா, ஆந்திரா மாநிலங்களிலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான நிதியை மட்டும் கேட்டால் கொடுக்க முடியாது. திமுகவை பழி வாங்குவதற்கான நடவடிக்கை இல்லை. இது யார் ஆட்சியில் இருந்தாலும் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமல் நிதியை மட்டும் கேட்டால் கொடுக்க முடியாது. அதிமுக ஆட்சியில் இருந்தாலும், பாஜக ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசு திட்டத்தை ஏற்கவில்லை என்றால் நிதி வழங்க முடியாது. திமுக அரசுக்கு நிதி வேண்டும் என்றால் நீதிமன்றம் செல்லட்டும்.
காங்கிரஸ் கட்சி கர்நாடகாவிலும், கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவிலும் தேசிய கல்விக் கொள்கையை ஏன் ஏற்றுக்கொண்டனர் என்பதை விளக்கி விட்டு தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடட்டும். மும்மொழி கொள்கையில் இந்தி கட்டாயம் இல்லை. மாணவர்கள் விரும்பும் மொழியை 3 ஆவது மொழியாக தேர்வு செய்து படிக்கலாம். தமிழகத்தில் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் இந்தி இருக்கிறது. ஆனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே இந்தி இல்லை என விமர்சித்தார்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஏன் அதிகரித்துள்ளது என்று தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தமிழக அரசு என்ன செய்ய போகிறது என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் பற்றி அப்பவே ஜெயலலிதா என்னிடம் கூறினார்... போட்டு உடைத்த ஆர்.பி. உதயகுமார்...
பல்வேறு மாநிலங்களில் பாஜக மாநில தலைவர்களை தேசிய பாஜக மாற்றம் செய்து வருகிறது. சில மாநிலங்களில் தற்போது உள்ள மாநில தலைவர்கள் நீடிப்பார்கள் என கூறியுள்ளனர். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில தலைவர்கள் மாற்றப்படுவார்கள். இரண்டு முறை ஒருவர் மாநில தலைவராக பதவி வகிக்கலாம். தமிழிசை சௌந்தர்ராஜன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரண்டு முறை தலைவர்களாக பதவி வகித்தனர். ஆனால், சி.பி. ராதாகிருஷ்ணன், கணேசன் உள்ளிட்டவர்கள் ஒரு முறை மட்டுமே பாஜக மாநிலத் தலைவராக இருந்தனர். எல்.முருகன் மூன்று ஆண்டுகள் நிறைவு செய்வதற்கு முன்னரே மத்திய அமைச்சர் பதவி கிடைத்ததால் அவர் மாநில தலைவராக நீடிக்க வில்லை. இது போன்று அனைத்திற்கும் உதாரணம் உள்ளது. எனவே தற்போது மாநில தலைவர் பதவி குறித்து தேசிய தலைமை தான் அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

