அண்ணாமலை அவசரத்தோடு, அறியாமையில் தொடர்ந்து பேசி வருகிறார் - கொளத்தூர் மணி
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் வரும் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் திராவிட விடுதலை கழக மாநாடு நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் திராவிட விடுதலைக் கழகம் சார்பில் என் தமிழ்நாடு என்ற இரண்டு நாட்கள் மாநாடு வரும் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இதுதொடர்பாக இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, "வருகின்ற 29 மற்றும் 30ஆம் தேதிகளில் சேலத்தில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு முன்னதாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு அறிவு சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட உள்ளது. பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, குறும்பட போட்டி உள்ளிட்டவை நடைபெற உள்ளது . இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கே என் நேரு வருகை தர உள்ளனர். இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிற அமைப்புகள் சார்ந்தவர்கள் வருகை தர உள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக ஆர்எஸ்எஸ் காலூன்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதற்கு பதவியில் இல்லாத சிலர் துணை போகிறது. இதனை தடுக்கும் விதமாகவே இந்த மாநாடு நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது” என்றார்.
ஆளுநர் ரவி ஆர்எஸ்எஸ் கொள்கைகளையும் முன்வைத்து மாநில அரசுக்கு எதிராக பேசி வருவதாகவும். சட்ட மசோதாக்களை நிறுத்தி வைப்பது என்பது மறுப்பதாகவே பொருள்படும் என்றும் கொளத்தூர் மணி தெரிவித்தார். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அவரசத்தோடு, அறியாமையில் தொடர்ந்து பேசி வருவதாகவும், அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது என்று கூறினார்.
மேலும், காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருந்தால் கூட, மணல் அள்ளும் செயல் தொடர் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற செயல்களில் தமிழகஅரசு அக்கறையுடன் செயல்பட வேண்டும், அதில் அக்கறை காட்டும் ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். குறிப்பாக விஏஓ கொலையில் நேரடியாக செயல்பட்டவர்கள் மட்டுமில்லாமல் மறைமுகமாக செயல்பட்டவர்களையும் கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் முன் வைத்தார். ஆணவ கொலைகளை தடுக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். வேங்கைவயல் விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணை குறித்து கருத்து தெரிவித்த கொளத்தூர் மணி, எத்தனையோ அறிவியல் முன்னேற்றம் கண்டுள்ள போது ஏன் ஏன் மனித கழிவுகளை வைத்து மரபணு சோதனை நடத்த முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.