புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு - கம்பத்தில் சோகம்
அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு. இரண்டு பேர் படுகாயம்.
கம்பம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லை நகர பகுதியாக உள்ளது கம்பம் நகர். இங்குள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமப்புற பகுதிகளுக்கு பயன்படும் வகையில் குறிப்பாக கேரள மாநிலத்தவர்களும் அதிகம் சிகிச்சைக்காக வரும் தலைமை அரசு மருத்துவமனையாக உள்ளது. கம்பம் அரசு தலைமை மருத்துவமனை. இங்கு உள் மற்றும் வெளி நோயாளிகளாக தினந்தோறும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்த நிலையில் கம்பம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 10 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு வருடங்களாக புதிய கட்டிடம் அமைக்கும் பணியில் வெளி மாவட்ட பணியாளர்கள் ஏராளமானோர் நாள்தோறும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வழக்கம் போல் மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன், முனீஸ்வரன் மற்றும் ரத்தினவேல் ஆகியோர் புதிய கட்டிடத்தில் உள்ள போர்டிகோ மற்றும் எலிவேசன் பகுதியில் கட்டிடப் பணிகளை செய்து கொண்டிருந்தனர்.
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
திடீரென அந்த கட்டிடம் இடிந்து அவர்கள் மீது விழுந்து கட்டிட சுவருக்குள் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து அருகில் பணிபுரிந்த பணியாளர்கள் கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி நம்பிராஜனை சடலமாக மீட்டனர். மேலும் உடன் பணிபுரிந்த முனீஸ்வரன் மற்றும் ரத்தினவேல் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து அவர்களை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதிதாக கட்டி வரும் இந்த மருத்துவமனை கட்டிடத்தில் உரிய தளவாடங்களை சரிவர பயன்படுத்தி கட்டிடம் கட்டாததால் புதிய கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உடன் பணிபுரிபவர்களும் சமூக ஆர்வலர்களும் வருத்தத்துடன் கவலை தெரிவித்து இந்தக் கட்டிடம் குறித்து தீவிர ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கையும் விடுத்துள்ளனர்.