Parliament Op Sindoor: இன்னைக்கு இருக்கு.. எதிர்க்கட்சிகளின் மும்முனை தாக்குதல்? சமாளிக்குமா பாஜக? திருப்பி விடுமா?
Parliament Op Sindoor: நாடாளுமன்றத்தில் இன்று பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் தொடங்க உள்ளது.

Parliament Op Sindoor: பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்காவின் தலையீடு தொடர்பாக கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
நாடாளுமன்ற விவாதம் - மும்முனை தாக்குதல்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கிய நிலையில், முதல் ஒரு வாரம் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின. இந்நிலையில் இன்று பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா முன்னெடுத்த ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசி வருவது தொடர்பாக மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் தொடங்குகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் மூன்று நாட்கள் நீடிக்கும் 16 மணி நேர விவாதத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதுவரை பதில் கிடைக்காமல் நீடிக்கும் பல கேள்விகளை முன்வைத்து அரசை முடக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
பிரதமர் மோடி பதில் அளிப்பாரா?
பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் (DGMOs) நேரடித் தொடர்புக்குப் பிறகு, தாக்குதல் இடைநிறுத்தப்பட்டது என்ற தனது நிலைப்பாட்டை மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், வர்த்தக ஒப்பந்தங்களை முன்வைத்து தானே அணு ஆயுதங்களை கொண்ட இருநாடுகளுக்கு இடையேயான மோதலை நிறுத்தியதாக ட்ரம்ப் 25 முறை குறிப்பிட்டுள்ளார். இதனால், உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீட்டை பிரதமர் மோடி எப்படி அனுமதித்தார்? எனவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றன. இந்நிலையில் இன்று தொடங்கும் இந்த விவாதத்தில், ஏதேனும் ஒரு நாளில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்று விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தயாராகும் தலைவர்கள்:
விவாதத்தில் மத்திய அரசை நோக்கி காத்திரமான கேள்விகளை எழுப்பக் கூடிய வலுவான தலைவர்களை களமிறக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. குறிப்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக சார்பில் கனிமொழி & திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மஹுவா மொய்த்ரா, விசிக தலைவர் தொல் திருமாவளவன், இடது சாரியை சேர்ந்த ஜான் பிரிட்டோஸ் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அடுத்த மூன்று நாட்களும் அவை நடவடிக்கைகளில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க காங்கிரஸ் கொறடா உத்தரவிட்டுள்ளார்.
மாநிலங்களவையிலும் விவாதம்:
செவ்வாய்க்கிழமை அதாவது நாளை மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் மேற்கொள்ளப்பட உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை பற்றிய செய்தியை 33 உலகத் தலைநகரங்களுக்கு எடுத்துச் சென்ற பல கட்சி பிரதிநிதிகளின் ஒரு பகுதியாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெறும் விவாதத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















